கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. குற்றவாளிகளின் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தது எப்படி?
கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாணவியிடம் இருந்து பறித்துச் சென்ற, ஆண் நண்பரின் செல்போனை பயன்படுத்தியபோது கும்பல் பதுங்கியிருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார்.

பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப் பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டனர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கும்பலை நள்ளிரவில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற மூன்று பேரையும் போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். குண்டு காயத்துடன் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கார்த்தி என்ற காளீஸ்வரன், சதீஷ் என்ற கருப்பசாமி, குணா என்ற தவசி ஆகிய மூன்று பேரும் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.
மூன்று பேரும் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கோவில் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜூன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசாய்சேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மூன்று பேரையும் பிடிக்க சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது மூன்று பேரும் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக சந்திரசேகரன் என்ற தலைமைக் காவலரை இடது மணிக்கட்டில் வெட்டி விட்டு ஓடியுள்ளனர். இதனால் போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர். அப்போதும் போலீசாரை தாக்க முற்பட்டதை அடுத்து, தற்காப்புக்காக மூன்று பேரையும் காலில் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் எப்படி கண்டுபிடித்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த 3 பேர் கும்பல், மாணவியிடம் செல்போனை பறித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்த ஆண் நண்பரின் செல்போனை, பாஸ்வேர்டை கேட்டு அவர்கள் பறித்துச் சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மாணவியிடம் பறித்துச் சென்ற செல்போனை அவர்கள் ஆன் செய்யாமல் இருந்துள்ளனர். அதன்பிறகு, அவர்கள் அதனைப் பயன்படுத்தியபோது, அந்தக் கும்பல் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த காவல்துறையினர், உடனடியாக அங்கு சென்று விசாரித்து அவர்களைச் சுற்றி வளைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications