Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மாணவி விவகாரம்: பெற்றோர் குற்றச்சாட்டு முதல் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் வரை.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, செங்குட்டைபாளையத்தில் பூப்பெய்திய பட்டியலின மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் ஆனந்தி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஏப்ரல் 5 ஆம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.

Coimbatore private school

ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது.

பூப்பெய்துவது என்பது இயற்கை நிகழ்வு. இதனைக் கூட புரிந்து கொள்ளாமல் பள்ளி நிர்வாகத்தினரே வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

மாணவியை வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் ஏ.எஸ்பி. சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், பள்ளி முதல்வரை சஸ்பெண்டு செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு கல்வித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலருக்கு தனியார் பள்ளி தாளாளர் எழுதியுள்ள கடிதத்தில், எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி பூப்பெய்தினார். தற்போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் அந்த மாணவியின் தாயார் பள்ளி முதல்வர் ஆனந்திக்கு தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். தேர்வு எழுதுவது குறித்து கேட்டபோது பள்ளி முதல்வர் தேர்வு எழுதாவிட்டால் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், மாணவியின் தாயார் அவரை தனியாக அமர்த்தி தேர்வு எழுத அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனால் அந்த மாணவியை தனியாக அமர்ந்து தேர்வு எழுத அனுமதியளித்தேன். இருப்பினும் பள்ளி முதல்வரின் இச்செயல்பாடு இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 (17) விதிகளுக்கு எதிரானது. அதனால் பள்ளி நிர்வாகம் முதல்வரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகள் ஏப்ரல் 5 ஆம் தேதி பூப்பெய்தினார். பெண் குழந்தைகள் பூப்பெய்தினால் வெளியல் எங்கும் அனுப்ப மாட்டோம். ஆனால், தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக எனது மகளுக்கு தனி இருக்கை ஒதுக்கி தர கேட்டிருந்தோம். ஆனால், அவருக்கு தனி இருக்கை கொடுக்காமல் 3 தேர்வுகளை வகுப்புக்கு வெளியே அமர்ந்து எழுதச் சொல்லியுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்வையும் சுமார் 2.30 மணி நேரம் படிக்கட்டில் அமர்ந்து எழுதியதால் காலில் கடும் வலி ஏற்படுவதாக எனது மகள் தெரிவித்தார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புதன்கிழமை சென்று கேட்டோம். அப்போது, இது என்ன அவ்வளவு பெரிய பிரச்னையா என்று சாதாரணமாக கேள்வி கேட்டனர். இதனை ஒரு விஷயமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. பெண் ஆசிரியர்கள் கூட இதைப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் மிகவும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளியில் விசாரணை மேற்கொண்ட பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவி பூப்பெய்தி உள்ளதால் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த மாணவியின் தாய் தான் பள்ளி நிர்வாகத்திடம் தனியாக அமர வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதே பள்ளியில் ஸ்டேஜில் அமர்ந்து 25 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் அந்த மாணவியை வகுப்பு அறைக்கு வெளியே அமர வைத்துள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக் கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை. நாங்கள் இருக்கிறோம். இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+