முதல்வர் ஸ்டாலின் வருகை.. கோவையில் போக்குவரத்து மாற்றம்.. நீங்க போற ரூட் இருக்கானு பாருங்க மக்களே
கோவை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி கோவை மாநகரில் வருகிற நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகச் சென்று நம்பர் மாதம் முதல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அவரது மாவட்ட வாரியான கள ஆய்வின் முதல் பயணமாக கோவைக்கு வருகை தரவுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பர் 5 ஆம் தேதி கோவை வருகை தரவுள்ளார். காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளார்.
அதேபோல, எல்காட் நிறுவனத்தின் ஐடி பூங்காவையும் திறந்து வைக்க ஏற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 471 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள செந்தில்பாலஜி உடனடியாக அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதல் அரசு விழா இதுவாகும். இதனால், இந்த அரசு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில், நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் கோவை சென்று கள ஆய்வைத் தொடங்க இருக்கிறேன். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களுடன் நிற்கும் இயக்கம் திமுக என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் வருகிற நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள் நவம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. இதர வணிக ரீதியிலான வாகனங்கள் அவிநாசி சாலையை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நவம்பர் 5 ஆம் தேதி காலை 7 மணி முதல் 2 மணி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டுநர்கள் அவிநாசி சாலையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
நகருக்குள் வரும் வாகனங்கள்: நவம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நீலம்பூரில் இருந்து சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, வெஸ்ட் கிளப் ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்லலாம்.
நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள்: கோவையிலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காந்திபுரத்தில் இருந்து சத்தி ரோடு, கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, தொட்டிபாளையம் வழியாக நீலாம்பூர் பைபாஸ் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
திருச்சி சாலை: திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, கிளாசிக் டவர், அரசு மருத்துவமனை, கூட்ஸ் ஷெட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம், புரூக்பாண்ட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனூர் வழியாக மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சத்தி சாலை: சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்லலாம்.
சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கேற்றவாறு தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகர காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications