கோவையில் வரும் புதிய நான்கு வழிச்சாலை.. வடவள்ளி- மருதமலை ரோட்டில் நடக்க போகும் சூப்பர் மாற்றம்
கோவை: கோவை மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் இருக்கிறது. இந்த முருகன் கோவிலுக்கு தினமும் பலர் சென்று வருகிறார்கள். இந்த சாலை என்பது மிக குறுகியதாக இருந்து வருகிறது. இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. இதையடுத்து வடவள்ளி-மருதமலை ரோட்டை ரூ.43 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன
கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்தள்ளது. சுமார் 500 அடி உயரமுள்ள மேற்கு தொடர்ச்சி மலை குன்றில் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த முருகன் கோவிலுக்கு கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் கோயிலுக்கு வருகிறார்கள்.

மருதமலையில் விஷேச நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சாலை வடவள்ளி வரை ஓரளவு அகலமாக இருககிறது. ஆனால் அதன்பின்னர் வடவள்ளி முதல் மருதமலை அடிவாரம் வரை சுமார் 4.6 கி.மீ. தூர சாலை மிகவும் குறுகலாக இருக்கிறது. இதனால் அடிக்கடி நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது. இதனால் கோவை மாநகர மக்கள் மட்டுமின்றி, பக்தர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். விசேஷ நாட்களில் வாகன நெரிசலை சரி செய்வது என்பது வடவள்ளி போலீசாருக்கு சவாலாக மாறி வருகிறது.
வடகோவையையும், மருதமலை முருகன் கோவிலையும் இணைக்கும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையின் எஸ்.எச். 167 சாலையாக இருக்கிறது. இந்த சாலை கோவை மாநகரி மிக முக்கியமான சாலையாக இருக்கிறது. 11.18 கி.மீ நீளமுள்ள இந்த சாலை பி.என்.புதூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி, இடையர்பாளையம், சோமையம்பாளையம், நவாவூர் பிரிவு, பாரதியார் பல்கலைக்கழகம், அரசு சட்டக்கல்லூரி போன்ற முக்கிய பகுதிகளை இணைப்பதால் நெரிசல் அதிகமாக இருக்கிறது. இந்த பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் வருவதால் நெரிசல் அதிகரிக்கிறது.
மருதமலை கோவிலில் மலை உச்சியில் சிறிய பார்க்கிங் மட்டுமே இருக்கிறது. இதனால் முக்கிய நாட்களில் மலைப்பாதையில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பலர் பேருந்துகளில் ஏறியே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. நெரிசல் அதிகமாக இருப்பதால் பக்தர்களும் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில் வடவள்ளியில் இருந்து மருதமலை வரை சாலையை விரிவுபடுத்த திட்ட அறிக்கை நெடுஞ்சாலை அதிகாரிகள் தயார் செய்தனர். தமிழக அரசின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 4.6 கி.மீ. தூரம் சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு ரூ.43 கோடி செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர்.
2.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தற்போதுள்ள 30 அடி அகல இருவழிச் சாலை 60 அடி அகலத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என்றும் அதற்கு நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளதும் என்றும் அதிகரிகள் தரப்பில்கூறப்படுகிறது. இதற்காக முதற்கட்ட நிலம் கையகப்படுத்துதலை தொடங்க வருவாய்த் துறையில் ரூ.13.86 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மீதி 2 கி.மீ. தூரத்துக்கு நான்குவழிச்சாலை அமைக்க ஏற்கனவே போதுமான இடம் இருப்பதாகவும் நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications