கோயம்புத்தூரை நிமிர வைத்த ஜான் சல்லீவன்.. இவர்தான் அந்த துரை.. கோவை கலரை மாற்றிய கலெக்டர்: EXCLUSIVE
கோவை: கோவை மாவட்டம் இன்று உலகப்புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு முழு காரணம் ஜான் சல்லீவன்தான் என்றும், அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள்தான் என்றும் அடித்து சொல்கிறார் நீலகிரி வேணுகோபால். யாரிந்த கோவை ஜான் சல்லீவன் தெரியுமா? ஜான் சல்லீவன் என்பவர்தான் நீலகிரியை முதன்முதலாக கண்டுபிடித்தவர்.. இவருக்கும் கோவைக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்.
கோவையின் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையிலும் கோயம்புத்தூர் விழா நவம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி தினந்தோறும் மாநகரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று கோயம்புத்தூர் தலைசிறந்த மாவட்டமாக விளங்கி கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர், அன்றைய கலெக்டர் ஜான் சல்லீவன் என்பவர்தான் என்பதை மறுத்துவிட முடியாது.
ஜான் சல்லீவன்: யார் இந்த ஜான் சல்லீவன்? ஆங்கிலேயரான இவருக்கும், கோவைக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு பின்னால் உள்ள மறக்க முடியாத வரலாறு என்ன? என்பதை பற்றி நம்முடைய ஒன் இந்தியா வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார் நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால். கோவையை பற்றி இதுவரை வெளிவராத பல்வேறு தகவல்களை நம்முடைய வாசகர்களுக்காகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:
"கடந்த 1800 ம் ஆண்டுதான், கோயம்புத்தூர் வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ், வந்தது.. முதல் 15 வருடங்கள் கோவையில், எண்ணற்ற சீர்கேடுகள் மலிந்து காணப்பட்டன.. முக்கியமாக, அந்த நேரத்தில் கோவையை ஆண்டு கொண்டிருந்த கலெக்டர்களால், ஊழல்கள் அதிகரித்திருந்தன.. ஜமீன்தார்கள் நிலச்சுவான்தாரர்கள் என தனிப்பட்ட முறையில், இவர்களுக்கு கோவையின் கிராமங்களை, கலெக்டர்கள் ஒதுக்கிவிடுவார்களாம்.. இவர்கள் தங்கள் மக்களிடமிருந்து வரியை வசூல் செய்து, கோவை அரசுக்கு செலுத்துவார்களாம்.

காசி செட்டி: இதில், 1815-ல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது காசி செட்டி ஊழலாகும்.. காசி செட்டி என்பவர் கலெக்டர் ஆபீசில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.. கோவை மாவட்டத்திலுள்ள தாசில்தார்களை எல்லாம் தன் கையில் போட்டுக் கொண்டு ஊழல் செய்தார் இந்த காசி செட்டி.. ஒருகட்டத்தில் இந்த ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது..
இது தொடர்பான விசாரணையை நடத்துவதற்காக, தாமஸ் மன்றோ மற்றும் ஜான் சல்லிவன் இருவரையும் கடந்த 1815-ல் கோவைக்கு அனுப்பி வைத்தது சென்னை மாகாணம்.
கவர்னர், கலெக்டர்: இவர்கள் 2 பேரும்தான், கோவை நிர்வாக ஊழலை கண்டுபிடித்து, அம்பலப்படுத்தினார்கள்.. இதற்கு பிறகு, தாமஸ் மன்றோ கவர்னராகிறார்.. ஜான் சல்லிவன், கோவையின் கலெக்டராக பதவியேற்கிறார். கோவையின் அடிச்சுவடியை அடியோடு மாற்ற நினைக்கிறார் ஜான் சல்லிவன்..
இதற்காக பல யோசனைகளை செய்து, இறுதியில் நில உரிமையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.. அத்துடன், ரயத்துவாரி வரியையும் கொண்டு வருகிறார். அதாவது, "உழுபவர்க்கே நிலம்" என்பதை அறிவித்து, பட்டா, சிட்டாவை அறிமுகப்படுத்துகிறார் ஜான் சல்லிவன்.

ரயத்துவாரி முறை: ஆனால், இந்த புதிய முறையை கிழக்கிந்திய கம்பெனி ஏற்கவில்லை.. இப்படியொரு புதிய வரைமுறையை மாற்றினால், கம்பெனிக்கு லாபம் வருமா? மக்களுக்கு லாபம் வருமா? எப்படி வரி வசூல் செய்வது? என்றெல்லாம் ஜான் சல்லீவனிடம், இங்கிலாந்து பாராளுமன்றம் விளக்கம் கேட்கிறது. இதையடுத்து, இதுசம்பந்தமான அனைத்து தகவல்களையும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்து பல மணி நேரம் வாதாடுகிறார் ஜான் சல்லிவன்.
இறுதியில், ஜான் சல்லீவனின் அனைத்து வாதங்களும் நியாயமானவையே என்று கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக் கொண்டது.. இதற்கு பிறகே, ரயத்துவாரி முறை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.. இதற்கு பிறகே, சேலம் முதற்கொண்டு, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது..
சீர்திருத்தங்கள்: அந்த வகையில் கோவை கலெக்டராக இருந்தபோது, ஜான் சல்லீவன் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அளப்பரியது.. ஜான் சல்லீவன் பெறும் கலெக்டர் மட்டுமே கிடையாது.. இவர் மிகச்சிறந்த நீதிபதி ஆவார்.. மிகச்சிறந்த நிர்வாக அதிகாரி, மிகச்சிறந்த வானிலை ஆராய்ச்சியாளர், மிகச்சிறந்த தொழில்முனைவர், மிகச்சிறந்த நகர திட்டமைய தலைவர், மிகச்சிறந்த என்ஜினியர், மிகச்சிறந்த முதலீட்டாளர், மிகச்சிறந்த விவசாயி, கிறிஸ்தவ மத கொள்கையாளர்.. அதைவிட முக்கியமாக ஏழைகளை காப்பாற்றுபவர்.
இப்படியே மொத்தம் 15 வருடங்கள் கோவையில் கலெக்டராக பணியாற்றினார் ஜான் சல்லீவன்.. இதனால், கோவை முழுவதிலுமே ஜான் சல்லிவனின் பெயர் உச்சரிக்கப்பட்டு கொண்டேயிருந்தது..
கிராம மக்கள்: அதாவது, கோவையில் மழை பெய்யாவிட்டால், விவசாயிகள் அனைவரும் கலெக்டர் ஆபீசுக்கு கிளம்பி வந்து, ஜான் சல்லீவனை தங்கள் கிராமத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பார்களாம். காரணம், தங்கள் கிராமத்துக்கு ஜான் சல்லீவன் காலடி பட்டாலே, மழை பெய்யும் என்று ஆழமாக நம்பினார்களாம். அந்த அளவுக்கு கலெக்டர் மீது அளவுகடந்த நன்மதிப்பை வைத்திருந்தார்கள் கோவை மக்கள்.
தாமஸ் மன்றோ இறந்தபிறகு, லஷிங்டன் என்பவர் கோவையின் கவர்னராக பதவியேற்றார்.. ஆனால், இவருக்கும் ஜான் சல்லிவனுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது.. எனவே, ஜான் சல்லிவனை நேரடியாக சாட முடியாமல், அவரிடம் பணிபுரிந்த ஹெட்-கிளார்க் ராமையா என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டை விதித்தார் லஷிங்டன்.
ஊழல் குற்றச்சாட்டு: இதனால் மனம் உடைந்துபோன ஜான் சல்லீவன், 15 வருடமாக வகித்து வந்த கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. ராமையா மீது விசாரணை நடக்கிறது.. ஆனால், இறுதியில் ராமையா நிரபராதி என்பது உறுதியானது.. ஜான் சல்லீவனை பழிவாங்கவே இப்படியொரு ஊழல் குற்றச்சாட்டு செலுத்தப்பட்டதும் நிரூபணமானது. இதனால் மறுபடியும் சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறை தலைவராக ஜான் சல்லீவன் பொறுப்பேற்றார்.. இதற்கு பிறகுதான் தமிழகம் முழுக்க இவர் நிறைய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார்.
ஒருமுறை ஜான் சல்லீவன் தன்னுடைய நூலில் எழுதும்போது, "கோவை மக்கள் நேர்மையானவர்கள்.. உழைப்பாளர்கள்.. இளகிய மனசுக்காரர்கள்" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.
கோவை மக்கள்: இன்று போர்வெல் மெஷினில் கோவை மாவட்டம், உலகப்புகழ்பெற்று விளங்குகிறது என்றால் ஜான் சல்லீவன் அன்று மேற்கொண்ட முயற்சியால்தான்.. 15 வருடம் கலெக்டராக இருந்தபோது, ஜான் சல்லிவன் செய்த சீர்திருத்தங்கள்தான், இன்றுவரை கோவையின் அடையாளமாகவும், முதுகெலும்பாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
கோவை மட்டுமல்ல, முதன்முதலில் நீலகிரி என்ற மாவட்டத்தை கண்டுபிடித்து இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜான் சல்லீவனை, யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது" என்று நம்முடைய "ஒன் இந்தியா" வாசகர்களுக்காக நம்மிடம் பூரித்து சொல்கிறார் நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால்.
நீலகிரி: கடந்த 1819ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி, உதகமண்டலம் பகுதிக்கு வந்த ஜான் சல்லீவன், சுமார் 3 வார காலம் அந்தப் பகுதியை சுற்றிப்பார்த்தார். இந்த பகுதியின் இயற்கைச் சுற்றுச்சூழல் ஜான் சல்லிவனை மிகவும் கவர்ந்ததால், கோத்தகிரி கன்னேரிமுக்கு என்ற இடத்தில், தன்னுடைய முகாம் அலுவலகத்தை அமைத்தார். இதுவே உதகையின் முதல் அரசு அலுவலகம் ஆகும். நீலகிரியின் முதல்கட்டிடமான இது இன்றளவும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளது. இந்த இடம் தற்போது ஜான் சல்லிவனின் நினைவிடமாகவும் உள்ளது.
இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும், அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாலும் இங்கு வாழ்ந்த மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர். பிறகுதான் நீலகிரியை, கோடை வாசஸ்தலமாக மாற்ற எண்ணி, இந்தப் பகுதியில் நிறைய குடியேற்றங்களை ஜான் சல்லிவன் உருவாக்கினார்.. உலக வரைபடத்தில் இன்று நீலகிரி இடம்பெற காரணமே ஜான் சல்லிவன்தான்.. அந்தவகையில் நீலகிரியின் தந்தையாகவே இன்றுவரை ஜான் சல்லீவன் போற்றப்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications