கோவை பொள்ளாச்சியில் 18 பவுன் தங்கம், 1.5 லட்சம் பணம்.. கைதானவர்களுக்கு ட்விஸ்ட் தந்த எஸ்ஐக்கள்
கோவை: கோவை மாவட்டம் சோமனூர் அருகே மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் வருண் காந்தி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இவரை காப்பக ஊழியர்கள் தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் கைதானவர்களின் நகை, பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருடைய மகன் வருண்காந்திக்கு 23 வயது ஆகிறது. இவர் சற்று மனநலம் பாதித்தவர் ஆவார். இவரை பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அங்கு கடந்த மே 12-ந் தேதி நிர்வாகிகள், ஊழியர்களால் மோசமாக தாக்கப்பட்டதில் வருண் காந்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக நிர்வாகிகள் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்பு உடையவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு தனிப்படையைச் சேர்ந்த மகாலிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தார்கள்.
இவர்கள் காப்ப ஊழியர்களான கவிதா, சுருதி, ஸ்ரேயா ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 18.5 பவுன் நகைகள், ஒன்றரை லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.. ஆனால் பறிமுதல் செய்த நகை, பணம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கருவூலத்திலும் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகை, பணத்தை அவர் கையாடல் செய்தது உறுதியானது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்தநிலையில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கையாடல் செய்த பணத்தில் ரூ.50 ஆயிரத்தை, தனது தலைலையிலான தனிப்படையில் இடம் பிடித்த மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜாவிடம் கொடுத்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து நகை, பணத்தை கையாடல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் மற்றும் அவரிடம் பணம் வாங்கிய மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications