கோவையில் தங்க நகையை பார்த்து சலனம்.. பரிசு பொருள் கடையில் பெண்ணுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
கோவை: கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் ஒரு பரிசு பொருள் விற்பனை கடை உள்ளது. இங்கு செல்வராணி என்பவர் வேலை செய்து வந்தார். அங்கு கடந்த 2022ம் ஆண்டு பிற்பகல் 2 மணி அளவில் இதயம் பட போட்ட டீ கப் வேண்டும் என்றும் பரிசாக தர வேண்டும் என்று தெய்வநதி என்ற பெண் கேட்டுள்ளார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் தெய்வநதி 7.5 சவரன் நகையை பறித்துக் கொண்டு, பூச்சி மருந்தை செல்வராணியின் மீது அடித்தார். அந்த தெய்வநதிக்கு இப்போது ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
பொதுவாக வழிபறி, நகை பறிப்பு, போன்ற குற்றங்களுக்கு சிறிய தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அது உண்மையல்ல.. சரியான சாட்சி ஆதாரங்கள் இருந்தால், குற்றத்தின் வகையை பொறுத்து ஏழு ஆண்டுகள் கூட சிறை தண்டனை கிடைக்கும். கோவையில் ஒரு பெண்ணுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் ஒரு பரிசு பொருள் விற்பனை கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 60 வயதாகும் செல்வராணி என்பவர் வேலை செய்து வந்திருக்கிறார். செல்வராணி கடந்த 11.2.2022 அன்று பகல் 2 மணியளவில் கடையில் இருந்தபோது, ஒரு பெண் வந்து, இதயம் படம் போட்ட டீ கப் போன்ற பரிசு பொருட்களை காண்பிக்குமாறு கேட்டு இருக்கிறார்.
செல்வராணி பரிசுப்பொருட்களை எடுத்து விட்டுத் திரும்பிப் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பெண், தனது கைப்பையில் வைத்து இருந்த கரப்பான் பூச்சிகளை ஒழிக்க பயன்படுத்தும், பூச்சி மருந்தை எடுத்து திடீரென்று செல்வராணியின் முகத்தில் பீய்ச்சி அடித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராணி நிலை குலைந்து போயிருக்கிறார். உடனே அந்தப் பெண், செல்வராணியின் கழுத்தில் இருந்த 7.5 பவுன் நகையைப் பறித்து விட்டுத் தப்ப முயன்றார்.
சத்தம் கேட்டு பக்கத்து கடைக்காரர்கள் சேர்ந்து அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் மதுரை மேலூரைச் சேர்ந்த 36 வயதாகும் தெய்வநதி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வநதியை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை கோவை 4-வது சார்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த கோவை 4-வது சார்பு நீதிமன்றநீதிபதி விக்னேஷ் மது, குற்றம்சாட்டப்பட்ட தெய்வநதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து தெய்வநதியை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சிறையில் அடைத்தனர். நகை பறிப்பில் ஈடுபடும் பெண்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications