கோவையில் லாரியை முந்தி செல்ல முயன்றபோது எமனான சாலை.. மகன் கண்முன்னே துடிதுடித்த இன்ஸ்பெக்டர் தாய்
கோவை: கோவை அருகே சிங்காநல்லூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். லாரியை முந்தி செல்ல முயன்றபோது சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் இன்ஸ்பெக்டர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. மகன் கண்முன்னே நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பானுமதி (வயது 52). இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

அரிசி மூட்டையுடன் வந்த லாரி
இந்த தம்பதியருக்கு சரேஷ் நாராயணன் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். பானுமதி நேற்று முன்தினம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டிற்கு சென்றார். பின்னர் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு நேற்று கோவைக்கு பஸ்சில் திரும்பினார். அதிகாலையிலேயே கோவைக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து பானுமதியை அழைத்து செல்வதற்காக அவரது மகன் இருசக்கர வாகனத்தில் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் தாயை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் ராஜபாளையம் இருந்து சிங்காநல்லூருக்கு அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.
குண்டும், குழியுமாக கிடந்த சாலை
இந்த லாரியை ராஜபாளையத்தை சேர்ந்த இருளப்பன் என்பவர் ஓட்டி வந்தார். லாரி அங்குள்ள காமராஜர் சாலை அருகே வந்தபோது, பின்னால் வந்த சரேஷ் நாராயணன் லாரியை முந்த நினைத்தார். அப்போது லாரியை முந்தி வேகமாக சென்றபோது சாலையில் குண்டும், குழியுமாக கிடந்ததால் திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் பானுமதி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பானுமதியை மீட்டு சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கதறி அழுத மகன்
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். தன் கண் முன்னே பலியான தாயின் உடலை பார்த்து சரேஷ் நாராயணன் கதறி அழுதார். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் இருளப்பனை பிடித்து விசாரணைconduct செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications