மாணவிகளிடம் பாசமாக பழகி பாலியல் தொல்லை.. கோவையை அதிரவைத்த பெண் ஆசிரியை
கோவை: பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகம் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில், கோவை அன்னூர் அருகே 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பணியிடம், வீடு, பொது இடங்கள் என்று எந்தப் பகுதியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால் அரசுத் தரப்பில், கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் தான் மாணவிகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து தெரிவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வழக்கு, கோவை மாவட்டம், வால்பாறை அரசுக் கலை அறிவியல் கல்லூரி பாலியல் வழக்கு என்று சமீபகாலமாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பெண் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு 14 வயது மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செளந்தர்யா என்ற ஒரு பெண் ஆசிரியர், சமூக அறிவியல் பாடம் எடுத்து வருகிறார்.
அதன்படி ஆசிரியை சௌந்தர்யா தான், அந்த மாணவியின் வகுப்பிலும் சமூக அறிவியல் பாடம் எடுத்து வந்தார். சமீபகாலமாகவே, ஆசிரியை சௌந்தர்யா மாணவிகளிடம் அநாகரீகமாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஏராளமான புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. அதேபோல 14 வயது மாணவிக்கும், சௌந்தர்யா பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.
அதிர்ச்சியடைந்த மாணவி, ஒருகட்டத்தில் சௌந்தர்யாவின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் இதுகுறித்து தனது பெற்றோரிடம் அழுதபடி சொல்லியுள்ளார். அதைக் கேட்டு பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து அன்னூர் காவல்நிலையத்தில் ஆசிரியை சௌந்தர்யா மீது புகாரளித்துள்ளனர்.
இதையடுத்து புகார் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவியின் புகார் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியை சௌந்தர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அன்னூர் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் கூறுகையில், பொதுவாக சௌந்தர்யா மாணவிகளிடம் நெருங்கி பழகுவார். அப்போது மாணவிகளிடம் மிகுந்த பாசமாக பேசி நெருக்கமாவார். நல்ல நெருக்கமான பிறகு பாலியல் தொல்லை கொடுப்பார். அப்படித்தான் இந்த மாணவியிடமும் நெருங்கி பழகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்றனர்.












Click it and Unblock the Notifications