அடப்பாவமே.. இப்படியா ஏமாத்துவாங்க! ரூ.15 லட்சத்தை ஆன்லைன் தோழனிடம் பறிகொடுத்த கோவை டீச்சர்! உஷார்
கோவை: கோவையில் சமூக வலைதளத்தில் தோழன்போல் பழகிய நபரால் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் நகையை அடகு வைத்து கிடைத்த ரூ.15 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்யும் கும்பலில் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சம் தொடங்கி கோடிக்கணக்கான ரூபாய்களை நாம் இழக்க நேரிடும்.

இதனால் தான் அடிக்கடி போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தற்போது கோவையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பல லட்சங்களை இழந்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அவர் எப்படி ஏமாந்தார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
கோவை அருகே உள்ள கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் ஒன்றின் மூலம் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருடன் நண்பராகி உள்ளார். அந்த நபர் தனது பெயரை கிளிங்டன் என தெரிவித்து டீச்சரிடம் பேசியுள்ளார். அப்போது அவர் லண்டனில் உள்ள பிரபல கார் ஷோரூமில் சீனியர் மேனேஜராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை டீச்சரும் நம்பியுள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் டீச்சரிடம், கிளிங்டன், ‛‛நான் இங்கிருந்து விலை உயர்ந்த பரிசை அனுப்பி வைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இதற்கு அவர் முதலில் வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால் கிளிங்டன் விடவில்லை. விமானத்தில் கட்டாயம் விலை உயர்ந்த பரிசை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வேறு வழியின்றி டீச்சரும் ஒப்புக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக டீச்சருக்கு ஒரு போன்கால் வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‛‛சுங்கத்துறையில் இருந்து பேசுகிறேன். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு பரிசு பொருட்கள் வந்துள்ளது. இதற்கு சுங்க கட்டணம் செலுத்திவிட்டு அதனை பெற்றுக்கொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார். இதையடுத்து டீச்சரும் சுங்கக்கட்டணம் உள்பட பல்வேறு வகைகளில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணத்தை மாற்றம் செய்துள்ளார்.
அதன்பிறகு அவரிடம் பணம் இல்லை. இதையடுத்து டீச்சர் தனது நகைகளை அடகு வைத்து பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இப்படியாக மொத்தம் ரூ.15 லட்சம் வரை அவர் அனுப்பி உள்ளார். ஆனால் அவருக்கு பரிசு பொருளும் கிடைக்கவில்லை. திரும்ப பணமும் வரவில்லை. இதையடுத்து கிளிங்டன் மற்றும் சுங்கத்துறை என பேசியவர்களையும் அவரால் தொர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டு விட்டதை டீச்சர் உணர்ந்தார். இதையடுத்து அவர் சம்பவம் குறித்து கோயம்புத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications