சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்துகளம் காண்கிறார்கள். கோவை, சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி மக்கள் நீதி மய்யத்தில் இருந்தவர். அண்ணாமலையின் ஆதரவாளராகவும் இருந்ததாக தகவல் வெளியானது. அவரைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் மேலூர் தவிர மற்ற 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என்று 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர் தொகுதியில் தேசிய இளைஞரணியைச் சேர்ந்த ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையம் தொகுதியில் மாநில இளைஞரணியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ் போராட்டம்
வேட்பாளர் பட்டியலிலேயே ஶ்ரீநிதி நாயுடு என்று ஜாதி பெயருடன் அவர் பெயர் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் ஶ்ரீநிதியின் பெயர் மட்டும் தான் ஜாதிய அடையாளத்துடன் வெளியானது. சிங்காநல்லூர் தொகுதியில் நாயுடு சமுதாயத்தினர் அதிகம் இருப்பதால், அவர்களின் வாக்கை பெறுவதற்காக இப்படி செய்ததாக விமர்சனம் எழுந்தது.
இந்த 2 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோவை செல்வன், மயூரா ஜெயக்குமார், பழையூர் செல்வராஜ், தங்கபாலு மகன், சக்திவேலு, எம்.என் கந்தசாமி உள்ளிட்ட பலர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் கட்சியில் இணைந்து சில வருடங்களே ஆனவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதால் கோவை காங்கிரஸ் கமிட்டியினர் கொதிப்படைந்தனர்.
வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு
ஶ்ரீநிதி, சூர்யபிரகாஷ் ஆகிய இரண்டு வேட்பாளர்களையும் மாற்ற சொல்லி கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரீஷ் ஷோடங்கர், நிவேதித் ஆல்வா, ஆகியோர் பண மாலை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் தயாரித்து, அதில் கருப்பு மை ஊற்றி செருப்பால் அடித்து எதிர்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில செயலாளர் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், "சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இந்தக் கட்சியில் இணைந்தே இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. சூர்யபிரகாஷ்க்கு வயதே 27 தான். அதே தொகுதியில் இந்த கட்சிக்காக 40 ஆண்டுகள் உழைத்து பல கோடி செலவு செய்தவர்களுக்கு எல்லாம் சீட் மறுக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை ஆதரவாளர்
ராகுல் காந்திக்கும், டெல்லிக்கும் தவறான தகவல்களை கொடுத்துள்ளனர். கட்சிக்கு சம்மந்தமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். சிங்காநல்லூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீநிதி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் உடுமலைப்பேட்டை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு பாஜக, அதிமுக கட்சிகளுக்கு சென்றார். அண்ணாமலையின் ஆதரவாளராகவும் இருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில்தான் ஶ்ரீநிதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பணம் வாங்கிக் கொண்டு சீட் வழங்கியுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்தவுடன் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டது. இவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியடையும். எனவே இரண்டு வேட்பாளர்களையும் மாற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications