விஏஓ பணத்துடன் கோவை குளத்தில் குதிச்சாரே? இப்ப அந்த ரூபாய் நோட்டு எங்கே? வாரிசு சான்றிதழுக்கு தேவையா
கோவை: கோவையில் வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்டாராம் விஏஓ வெற்றிவேல்.. அந்த லஞ்ச பணத்தை வாங்க முயன்றபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது.. இப்போது விஏஓ கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடக்கிறது.. பேரூர் குளத்தில் போலீசார் தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
5 ஆயிரம் லஞ்சம்
கோவை பேரூர் அடுத்த ஆலாந்துறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு 62 வயதாகிறது.. இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் 35 வயதான விஏஓ வெற்றிவேல் என்பவரை அணுகியிருக்கிறார்.. அதற்கு வெற்றிவேல் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம். ஆனால், லஞ்சம் தர விரும்பாத கிருஷ்ணசாமி, கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் இதுகுறித்து புகார் தந்தார்.. உடனே அதிகாரிகளும், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணசாமியிடம் தந்துள்ளனர்.

விஏஓ வெற்றிவேல்
கிருஷ்ணசாமியும், அந்த பணத்தை விஏஓ வெற்றிவேலிடம் தந்துள்ளார்.. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெற்றிவேலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். திடீரென போலீசார் தன்னை நோக்கி வருவதை பார்த்த விஏஓ வெற்றிவேல், உடனே தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். ஆனால், போலீசார் அவரை விடாமல் துரத்தினார்கள்.
தொடர்ந்து போலீசார் தன்னை விரட்டி வருவதை பார்த்த வெற்றிவேல், பேரூர் குளத்தேரி சாலையில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு, பேரூர் குளத்தில் இறங்கிவிட்டார்.. அத்துடன் லஞ்சமாக வாங்கிய பணத்தையும் குளத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த போலீசாரும் குளத்தை சுற்றி வளைத்ததுடன், அந்த குளத்தில் இறங்கி வெற்றிவேலை பிடித்து கைது செய்தனர்.
குளத்தில் ரூபாய் நோட்டுகள்
ஆனால் இரவு நேரம் என்பதால் குளத்தில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால், நேற்று காலை பேரூர் குளம் பகுதிக்கு வந்த போலீசார், பேரூர் பேரூராட்சி ஊழியர்கள் 4 பேர் உதவியுடன், குளத்தில் வீசப்பட்ட பணத்தை தேடினார்கள்.. அப்போதும் பணம் கிடைக்கவில்லை.. இதனால் குழப்பமடைந்த போலீசார், வெற்றிவேல் பணத்தை எங்கு வீசினார் என்பது குறித்து, அவரிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
குளத்திற்குள் வீசிய பணத்தை மீட்பதற்காக இரவு முழுவதும் அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. இதற்காகவே புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.. குளத்தில் இருந்த சேறு வரை தோண்டி எடுத்துள்ளனர். ஆனால், வெற்றிவேல் வீசிய பணம் எதுவும் கிடைக்கவில்லை.
2வது நாளாக தேடியும் பணம் கிடைக்கவில்லை
இதனால், கிருஷ்ணசாமியிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்தனுப்பிய ரூபாய் நோட்டில் இருக்கும் வரிசை எண்ணும், குளத்தில் இருந்து மீட்கப்படும் ரூபாய் நோட்டின் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டுமாம். அதனால்தான், 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் உதவியுடன் குளத்தில் போடப்பட்ட ரூபாய் நோட்டை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர..
அயன் படத்தில்கூட இப்படித்தான் ஒரு சீன் வரும்.. திடீரென ரெய்டு நடத்த அதிகாரிகள் வரும்போது, ரெய்டில் இருந்து தப்பிக்க குட்டையில் ஒரு மூட்டையை சூர்யா தூக்கிபோட்டு விடுவார்... அதுபோலவே இப்போதும் நடந்துள்ளது. ஆனால், கிருஷ்ணசாமி, ரூபாய் நோட்டுக்களை வெறுமனே தூக்கி எறிந்தாரா? அல்லது கவரில் சுற்றி தூக்கி எறிந்தாரா? தெரியவில்லை. விசாரணை அவரிடம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications