"மீண்டும் மோடி வென்றால் அரசியல் சாசனமே இருக்காது.. அதிபர் ஆட்சி தான் இருக்கும்!" ஆ.ராசா பரபர பேச்சு
கோவை: மேட்டுப்பாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி ஆ ராசா, லோக்சபா தேர்தலில் மீண்டும் மோடி வென்றால் இந்திய அரசியல் சாசனமே இருக்காது என்று பேசியுள்ளார்.
கோவை மாவட்டத்தை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளைத் தொடக்க விழாவில் திமுக எம்பி ஆ ராசா கலந்து கொண்டார். சிறுமுகை பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் அவர் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஆ ராசா, நடக்கும் மக்களவை தேர்தலில் மோடி வென்றால் இந்திய அரசியல் சாசனம், மதச்சார்பின்மையே இருக்காது என்று அவர் பேசியுள்ளார்.
ஆ ராசா: சிறுமுகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா.. இல்லையா என்பது குறித்த விவாதத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விடலாம். இது ஏதோ ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் இல்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் தான் அரசியல் சட்டத்தை நாம் வைத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது தூக்கி எரியப் போகிறோமா என்பதை முடிவு செய்யும் தேர்தல்..
அரசியல் சாசனம் இருக்காது: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் இந்திய அரசியல் சாசனம் இருக்காது.. மதச்சார்பின்மை இருக்காது. உச்ச நீதிமன்றம் இருக்காது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு வேலை இருக்காது. அதன் பிறகு அதிபர் ஆட்சி முறை வந்துவிடும்.
இன்றை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் மதவாதத்தைப் புகுத்திவிட்டனர். நடுநிலையான பத்திரிகைகளை எல்லாம் கூட தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் இப்போது ஒருவித மாய ஆட்சியை மத வெறி ஆட்சியைத் தான் நடத்தி வருகிறார்கள்" என்று பேசியிருந்தார்.
இந்தியா கூட்டணி: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு பல்வேறு கட்சிகள் ஒரே அணியில் ஒன்று கூடியுள்ளது. இந்த "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என்று பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.. இந்தியா கட்சித் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக இதே விமர்சனத்தைத் தான் முன்வைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஒடிசாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் கார்கே, "இந்த லோக்சபா தேர்தலுக்குப் பின் மோடி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் சர்வாதிகாரம் தான் இருக்கும்; அப்போது நமது நாட்டில் ஜனநாயகம் இருக்காது.. தேர்தலும் இருக்காது. இந்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலே நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும். இதற்குப் பிறகு வாக்குப்பதிவு என்பதே இல்லாத சூழல் கூட ஏற்படும்" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications