பல நலத்திட்டங்கள்.. பத்திரிகையாளர்களுக்கு பக்கபலமாக இருக்கும் திமுக.. அமைச்சர் முத்துசாமி பேச்சு
கோவை: தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி இருக்கிறதோ அப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் முத்துசாமி குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு அமைச்சர்கள் முத்துசாமி பேசுகையில், தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி இருக்கிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தனர். இந்த மாநாட்டில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
நாங்கள் தனித்தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறோம். ஆனால் அனைத்து பத்திரிகையாளர்களை சேர்த்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களை சந்தித்தது மகிழ்ச்சி. வேறு மாநிலங்களில் இருந்து கூட பத்திரிகை நண்பர்கள் வந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை நண்பர்கள் மீது தனி அக்கறை எடுத்து கொள்வதை நாங்கள் பலமுறை பார்த்து உள்ளோம்.
அதற்கு என்ன காரணம் என்னவென்றால் திமுக எப்போதும் பத்திரிகை, ஊடகங்களை முழுமையாக நம்பி அதன் உண்மை தன்மையை எடுத்து கொண்டு அதனோடு சேர்ந்து பயணிக்கும் இயக்கமாகும். மேலும் கருணாநிதி தனது பொதுவாழ்க்கையை துவங்கும்போதே எழுத்து வடிவில் வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு தான் அரசியலுக்குள் நுழைந்தார்.
ஒரு பத்திரிகை தொடர்ச்சியாக 80 ஆண்டுகாலம் அவரால் நடத்தப்பட்டுள்ளது. கைபிரதியில் ஆரம்பித்து அவர் அதனை நடத்தினார். எப்படி பத்திரிகையையும், கருணாநிதியையும் பிரிக்க முடியாதோ, அதேபோல் தான் பத்திரிகை நண்பர்களையும், திமுகவையும் பிரிக்க முடியாது. கருணாநிதி எந்த வகையான அணுகுமுறையை மனதில் வைத்து செயல்பட்டாரோ அத்தகைய அணுகுமுறையை தான் முதல்வர் ஸ்டாலினும் கடைப்பிடித்து வருகிறார்.
நீங்கள் செய்தியில் என்ன போடுகிறீர்கள்? என்பதை விட உங்களிடம் இருந்து என்ன ஆலோசனை வருகிறது? என்பதை தான் கவனிக்கிறார். இதனை நாங்கள் பார்த்துள்ளோம். பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்கும்போது அது சாதகமாகவும், பாதகமாகவும் வரும். சில நேரங்களில் கடுமையாக கூட வரும். அத்தனையையும் அவர்கள் நிதானமாக தான் அணுகுவார்கள்.
இருந்தாலும் அதில் இருந்து பல விஷயங்களை எடுத்து கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்கும்போது அதில் நமக்கான பயன் என்ன? என்பதை பார்ப்பார்கள். பத்திரிகையில் இருந்து அரசு, கழகம், பொதுவாழ்க்கைக்கான முன்னேற்றத்துக்கு வழிவகை கிடைக்கும் என்பதை பார்க்கிறார்கள். திமுக ஆட்சி இருக்கிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் பிரதீப் குமார், பொருளாளர் ராம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications