கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4000 கிடைக்கும்... ஸ்டாலின் வாக்குறுதி
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி, ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.4,000 கிடைக்கும் என்று கோவை நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
தமிழக சட்டபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், சூலூர் தொகுதியின் கொமதேக வேட்பாளர் பிரிமியம் செல்வம் ரவி ஆகியோரை ஆதரித்து, கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும் போது, தமிழக அமைச்சர்களின் ஊழலுக்கு, போலீஸ் உடந்தையாக உள்ளது. காவல்துறை அதிகாரிகள் தங்களை திருத்திக்கொள்ளாவிடில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நல்லவற்றை குறிப்பிட்டுள்ளோம்.

கலைஞர் பிறந்த நாள்
அந்த வரிசையில், கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.4000 வழங்கப்படும். தொழில்வளம் மீண்டும் செழிக்க, மாநில உரிமையை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

சிஏஏ சட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக போராடிய போது, அதற்கு ஆதரவாக மாநிலங்களவையில் பாஜகவிற்கு பயந்து பன்னீர்செல்வத்தின் மகன் வாக்களித்தார். இப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கி விடுவோம் என பொய்யான வாக்குறுதி அளித்து இருக்கிறது.

பொள்ளாச்சி வன்கொடுமை
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நான் இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பிரதி எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது, கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் வர அனுமதிக்கவில்லை. தற்போது தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஜனாதிபதியிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது .

புறநகர் உருவாக்கம்
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும், இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் துவங்கப்படும், நவீன புதிய புறநகரை உருவாக்கி, கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும், போக்குவரத்தை குறைக்கும் விதமாக பறக்கும் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மோடி மஸ்தான்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என தான் வலியுறுத்திய நிலையில், அதிமுக அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூலூரில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும்,மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது இது திராவிட மண்" இவ்வாறு பேசினார்,












Click it and Unblock the Notifications