"அண்ணா என்ன சொன்னார்? கட்சிப் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்" இபிஎஸ்-க்கு புத்தகங்கள் அனுப்பிய சிவசேனாபதி
கோவை: திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு புத்தகங்கள் அனுப்பியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அண்ணா எழுதிய ஐந்து புத்தகங்களை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேய சிவசேனாபதி தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள்களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன்.
ஆதலால் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க!! என்று தினந்தோறும் கூறி, ஆட்சி நடத்திய அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடிய நீங்களும், உங்கள் சகாக்களும், அண்ணா என்ன சொன்னார்? அண்ணா என்ன பேசினார்? அண்ணா என்ன எழுதினார்? அண்ணா எதைக் கடைப்பிடித்தார்? என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குப் பின் கருத்துகளை தெரிவியுங்கள்.

சுயநலத்தை கைவிடுங்கள்
எதிர்க்கட்சித் தலைவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் என்றெல்லாம் பதவியை வைத்துக்கொண்டு, சுயநலமாக செயலபட்டுக் கொண்டிருக்காதீர்கள். வெட்கப்பட்டுத் தலைகுனியக் கூடிய ஒரு நிலைமையை, திராவிடம் என்ற பெயருக்கும், அறிஞர் அண்ணா என்ற பெயருக்கும் உருவாக்கி இருக்கிறீர்கள்.

திராவிடம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இத்துடன் அறிஞர் அண்ணா எழுதிய ஐந்து புத்தகங்களை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். இதை நீங்களும் உங்களது முப்பத்து மூன்று முன்னாள் அமைச்சர்களும் அமர்ந்து படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். படிப்பதற்கு முடியாவிட்டால் யாரையாவது படிக்கச் சொல்லி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
சுப.வீரபாண்டியன், திராவிட கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி அண்ணாமலை போன்றோரை அழைத்து அதிமுக செயற்குழுவிலோ அல்லது பொதுக்குழுவிலோ திராவிடம் என்றால் என்ன? அறிஞர் அண்ணா எதற்காக இந்த கட்சியை உருவாக்கினார்? என்றெல்லாம் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு பேசுங்கள்.

கட்சிப் பெயரை மாற்றிவிடுங்கள்
பாஜக-விற்கு அடிமையாக இருப்பதையும், அண்ணாமலைக்கு அடிமையாக இருப்பதையும் விட்டுவிட்டு நல்ல அரசியலைக் கையில் எடுங்கள். அப்படி இன்றி அண்ணா கூறியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதானால், தயவு செய்து கட்சி பெயரை அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அங்கே இருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள் எவை?
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி அனுப்பிய நூல்களின் விவரம்: நீதிக்கட்சிக்கட்சித் தலைவர் பெரியாரின் தலைமையுரை, பனகல் அரசர், கருவறை நுழைவுப் போராட்டம், திராவிடர்கள் யார்?, திராவிடர் தந்தை சி.நடேசனார், ஆரிய மாயை, அண்ணா கண்ட தியாகராயர், பெரியாரின் குடந்தை பேருரை, திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு, இவர்தான் பெரியார் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications