கட்டுமானப் பொருட்களில் கூட கமிஷன் பார்க்கிறார்கள்.. கோவையில் திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
கோவை: கோவையில் இன்று பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி, கட்டுமானப் பொருட்களில் கூட திமுக கமிஷன் பார்க்கிறது என்று குற்றச்சாட்டு வைத்தார். மேலும், திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது என்றும், இதனால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 போலீஸ்காரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்ததும், போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்படும்; தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக மாறும் என்றும் கூறினார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' களத்தில் உள்ளதால், அரசியல் களம் அதிர தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார்.

கட்டுமான பொருட்களில் கூட கமிஷன்
அந்த வகையில், இன்று எடப்பாடி பழனிசாமி சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார். இதில், சிங்காநல்லூர் தொகுதியில் ரோடு ஷோ சென்ற எடப்பாடிக்கு கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் ஜி.வி. ரெசிடென்சி இணைப்புச் சாலையில் மக்கள் மத்தியில் எடப்பாடி உரையாற்றினார். அப்போது அவர், கட்டுமானப் பொருட்களில் கூட திமுக கமிஷன் பார்ப்பதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும் திமுக மீது குற்றச்சாட்டு வைத்தார். எடப்பாடி கூறியதாவது:
"தமிழ்நாட்டில் தொழில் நிறைந்த மாவட்டம் கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் போது இங்கு 3 ஷிப்ட்களில் தொழில் சிறப்பாக நடந்தது. ஆனால், இந்த திமுகவின் அவல் ஆட்சியில் ஒரு ஷிப்ட் தான் நடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு என்னவென்றால், அதிமுக ஆட்சி அமைப்பதுதான்."
கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டது
"திமுக ஆட்சி அமைந்த ஒரே வருடத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது என முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்கே பார்த்தாலும் போதை நடமாட்டம் அதிகமாகியுள்ளது. இன்று காலை கூட தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது என்னிடம் ஒருவர் சொன்னார். 'ரோட்டில் நடந்துசெல்லும்போது யார் வந்து வெட்டுவார்கள் என்று தெரியாத அளவுக்கு மோசமான நிலை உள்ளது' என்றார்.
இதற்கெல்லாம் காரணம் போதைதான். இதனை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. 'போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று இப்போது சொல்கிறார். ஆனால் நாங்கள் சொல்லும்போதே நடவடிக்கை எடுத்து இருந்தால், தமிழ்நாட்டை காப்பாற்றியிருக்கலாம். எல்லாம் சீரழிந்த பின்னர் சொல்கிறார். திமுக ஆட்சியில் 6 மாதங்களில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்களுக்கு யார் தான் பாதுகாப்பு கொடுப்பார்கள்? திமுக ஆட்சி இருக்கும் வரை மக்களை மக்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்."
525 வாக்குறுதிகள் கொடுத்தனர்
"அதிமுக ஆட்சி அமைந்தவுடன் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். கொங்கு மண்டலத்தில் முதியோர்களை கொலை செய்து கொள்ளையடிக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கு முடிவுகட்டப்படும். கடந்த தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிட்டார். 'சொத்து வரி உயர்த்தப்படாது' என்று சொன்னார். ஆனால் அப்படியா நடக்கிறது?
குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டார்கள். மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை, அவர்களது குடும்பத்தைத்தான் கவலையாக வைத்திருக்கிறார்கள் - கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வரை வருகிறார்கள். ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ, எம்.பி., ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம்."
கட்டுமான பொருட்கள் விலை
"திமுக ஆட்சியில் இப்போது கட்டுமானப் பொருட்கள் விலையும் அதிகரித்துவிட்டது.
ஒரு யூனிட் M-sand அதிமுக ஆட்சியில் ₹2,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது ₹5,500க்கு விற்கப்படுகிறது. இதுபோல், ஒரு யூனிட் ஜல்லி அதிமுக ஆட்சியில் ₹2,000க்கு விற்றது; திமுக ஆட்சியில் ₹4,500க்கு விற்கப்படுகிறது.
ஒரு டன் கம்பி எங்கள் ஆட்சியில் ₹40,000 என்றால், இப்போது ₹70,000.
ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் ₹6க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இப்போது ₹12 வரை விற்கப்படுகிறது. ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. எல்லாவற்றிலும் கமிஷன் வருவதால், இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. ஒரே ஐந்தாண்டில் இவ்வளவு விலை உயர்த்திவிட்டது."
* அதிமுக ஆட்சி வந்தால் - இலவச மடிக்கணினி உள்ளிட்ட பலன்கள்
* ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால், அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
* மனை இல்லாதவர்களுக்கு, அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்கும்.
* ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
* ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு, ஆட்டோ வாங்குவதற்கு ₹75,000 மானியம் கொடுக்கப்படும்.
* ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இலவச மடிக்கணினி திட்டம், அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் அமல்படுத்தப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications