மேற்கு மண்டலத்தில் 13 தொகுதிகள்.. வேகமெடுக்கும் செந்தில் பாலாஜி.. களமிறங்கிய கரூர் கம்பெனி!
கோவை: மேற்கு மண்டலத்தில் 13 தொகுதிகளில் திமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், செங்கோட்டையனின் நீக்கத்தையும் பயன்படுத்தி அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மேற்கு மண்டலத்தில் திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஏற்கனவே மேற்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்தும் விலகி இருப்பதால், முழுக்க முழுக்க தேர்தல் பணிகளை செந்தில் பாலாஜி மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பயன்படுத்திக் கொள்ளவும் திமுக தீவிரமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் மேற்கு மண்டலமான கிருஷ்ணகிரி தொடங்கி நீலகிரி வரையிலான 57 தொகுதிகள் இருக்கிறது. இதில் சுமார் 40 தொகுதிகள் அதிமுக வசம் இருக்கிறது. திமுகவிடம் 17 தொகுதிகள் மட்டுமே இருக்கிறது.
இம்முறை தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை சமன் செய்ய திமுக தலைமை கொங்கு மண்டலத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. ஏனென்றால் கடந்த தேர்தலிலேயே கொங்கு மண்டலத்தில் ஒரு 13 தொகுதிகளில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தது.
கிணத்துக்கடவு, கோவை தெற்கு, கோவை வடக்கு, பொள்ளாச்சி, மடத்துக்குளம், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், கூடலூர், மொடக்குறிச்சி, பரமத்திவேலூர், மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேற்கு மண்டலத்தில் இம்முறை 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கரூர் கம்பெனியும் களமிறங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. இம்முறை மேற்கு மண்டலத்தில் கூடுதலாக தொகுதிகளை பெற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதனால் அதிமுகவினர் பாஜகவுக்கு நேரடியாக வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த தேர்தலிலேயே பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் 4ல் மட்டுமே வென்றது. இதனால் இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டால், அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணி கட்சியினரையும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட சைலண்ட் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications