காவிரி கரையில் அதென்ன உருவம்? பார்க்கவே வித்தியாசமா இருக்கே.. பவானி ஆற்றில் அது பாட்டுக்கு நடக்குது
கோவை: பவானி ஆற்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது பலரையும் ஆச்சரியப்பட வைத்ததுடன், இந்த உயிரினம் பற்றி பல்வேறு தகவல்களை இணையவாசிகள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.
நீர்நாய்கள்.. இது நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பு கொண்ட ஒரு வகையான பாலூட்டி இனமாகும்... பாதிநேரம் கரையிலும், மீதி நேரம் நீரிலும் வாழக்கூடியவை என்பதால், இதனை பாதி நீர்வாழ் பாலூட்டிகள் என்பார்கள்.

நாய் வகையான விலங்கு என்றாலும், மீன்கள், இறால், நண்டு, நத்தை போன்றவற்றையே இரையாக சாப்பிடுகின்றன இந்த நீர்நாய்கள்.. அதாவது, நிலத்தில் இரைகளை பிடித்துக் கொண்டு நீருக்குள்ளும், நீருக்குள் இரைகளை பிடித்து நிலத்திலும் வைத்து சாப்பிடக்கூடியவை.
சதுப்பு நிலம்: எப்போதுமே நல்ல தண்ணீரில் மட்டுமே இந்த நீர்நாய்கள் வாழும்.. சதுப்புநிலம், ஈர நிலம், ஆறு, குளம் மற்றும் நெல்வயல்களில் அதிகமாக நீர்நாய்கள் காணப்படும். மனிதர்களை கண்டால், ஆற்றில் வளர்ந்து நிற்கும் கோரைப்புற்களுக்கு நடுவில் தன்னையும், தன் குட்டிகளையும் மறைத்து கொள்ளுமாம்..
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை முன்பெல்லாம், மேற்கு தொடர்ச்சிமலையையொட்டிய ஆற்றுப்படுகைகள் , திருச்சி வழியாக டெல்டாவிற்கு பாயும் காவிரி ஆற்றுப்படுகைகளில் நீர்நாய்கள் அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள்.
நீர்நாய்கள்: மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நீர் நாய்கள் ஒரு காலத்தில் காவிரி கரையோரம் அதிகமாக இருந்ததாம். ஆனால், இப்போது நீர் நிலைகள் பல்வேறு கழிவுகள் கலப்பது, நீர் மாசடைவது, மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கத்தால் நீர் நாய்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றன. அதனால்தான், அழிந்து வரும் விலங்கினமான நீர்நாய்கள் கருதப்படுவதால், இதனை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்..
சமீபகாலமாக தமிழகத்தில் அவ்வளவாக நீர்நாய்கள் காணப்படவில்லை.. சமீபத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கோயில் குளத்தில் தாமரைக்கொடிகள் படர்ந்துள்ள நிலையில், 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடி கொண்டிருப்பதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

உயிரினங்கள்: பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர்.. மாலை நேரம் என்பதால், இந்த உயிரினங்கள் குளத்தின் கரைகளில் துள்ளி குதித்து விளையாடியிருக்கின்றன. அப்போது அங்குவந்த வனத்துறையினர்தான், இந்த உயிரினங்கள் நீர் நாய்கள் என்பதை அறிந்தனர். ஆனால், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததுமே, அந்த நீர்நாய்கள் உடனடியாக குளத்துக்குள் சென்று பதுங்கி கொண்டன.
இப்போது பவானி ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.. குடிநீருக்காக இங்கு தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரூந்து நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது..
கண்டு களிப்பு: இங்குள்ள பவானி ஆற்றுக்கரைகளில் இன்று 10 நீர் நாய்கள் கூட்டம் கூட்டமாக விளையாடி கொண்டிருந்தன.. பவானி ஆற்றில் இப்படி நீர்நாய்கள் காணப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.. எனவே, மிக மிக அரிதான நிகழ்வு என்பதால், பொதுமக்கள் இந்த நீர்நாய்களை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.












Click it and Unblock the Notifications