கோவை போலீஸ் நடத்திய வாகன சோதனை.. தவளை தன் வாயால் கெட்ட கதை.. இளைஞைருக்கு சிக்கல்
கோவை: கோவை உக்கடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோலீசாரை பார்த்து உங்களுக்கு இங்கு வாகன சோதனை நடத்த யார் அனுமதி கொடுத்தது.. எப்படி வாகன சோதனை நடத்தலாம் என்று சராமரியாக மிரட்டிய இளைஞர் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் சிக்கும் இளைஞர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
போலீசார் வாகன சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் உள்ள நடைமுறை.. தினசரி குறிப்பிட்ட இடங்களில் திடீரென வாகன சோதனை நடத்துவார்கள்.. அப்படி சோதனை நடத்தும் போது, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் காட்ட வேண்டும். வாகனத்தின் ஆவணங்களைசரியாக வைத்திருக்க வேண்டும். தலைகவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். பின்னால் யாராவது அமர்ந்து இருந்தால் அவர்களும் தலை கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வாகனத்திற்கு இன்சூரன்ஸ் கரெண்டில் இருக்க வேண்டும். வாகனத்திற்கு புகை பரிசோதனை சான்று இருக்க வேண்டும். காரில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.. கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் சரக்கு வாகனங்கள் என்றால் அதில் சரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
எந்த வாகனம் என்றாலும் வாகன ஓட்டுநர்கள் மதுஅருந்தி இருக்கக்கூடாது. மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கண்டிப்பாக வாகனம் பறிமுதல் செய்யப்படும். அபராதமும் கடுமையாக விதிக்கப்படுகிறது. இதேபோல் பார்க்கிங் இல்லாத பகுதிகளில் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இது எல்லா ஊர்களிலும் உள்ள நடைமுறை.
கோவையை பொறுத்தவரை நகர்புறங்களில் தினசரி போக்குவரத்து போலீசார் சோதனை செய்வது வழக்கம். சிலர் தலைகவசம் அணியாமல் வந்து போலீசாருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடும் நிகழ்வுகள் நடைபெறும். சிலர் மதுபோதையில் வந்து போலீசாரின் சோதனையில் தகராறு செய்வதும் நடக்கும்.
இந்நிலையில் கோவை தெற்கு உக்கடம் பொன்விழா நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட் 'லாக்' கட்டாயம் போட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர். மேலும் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த அப்பாஸ்(30) என்பவர் போலீசார் வாகன சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். மேலும் இங்கு வாகன சோதனை நடத்த யார் உங்களுக்கு அனுமதி அளித்தார் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதுடன், போலீசாரை மிரட்டினாராம். இதனால் போலீசாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் பெரியகடை வீதி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அப்பாஸ் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications