பாஜக ஏபி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்.. வரதட்சணை விவகாரத்தில் கோவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
கோவை: வரதட்சணை தொடர்பான வழக்கில் ஆஜராகாத தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் மற்றும் அவரது தந்தைக்கு கோவை மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏபி முருகானந்தம் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவில் தமிழ்நாடு பொதுச்செயலாளராக இருப்பவர் ஏபி முருகானந்தம். மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக ஏபி முருகானந்தம் உள்ளார்.

ஏபி முருகானந்ததிற்கும் கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த சாவடிபுதூரை சேர்ந்த மகள் ஞான சவுந்தரி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு அடுத்த சில மாதங்களிலேயே ஞான சவுந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தான் ஏபி முருகானந்தம் மீது வரதட்சணை தொடர்பான புகார் எழுந்தது. அதாவது திருமணத்தின்போது ஏபி முருகானந்தத்திற்கு அவரது மனைவி ஞான சவுந்தரியின் தந்தை சுந்தரசாமி சார்பில் வரதட்சணையாக தங்க நகைகள், நிலம், வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மகள் ஞான சுந்தரி தற்கொலை செய்ததால் தந்தை வரதட்சணை, சீதனமாக வழங்கிய பொருட்களை திரும்ப கேட்டுள்ளார்.
மேலும் அதுதொடர்பாக ஏபி முருகானந்தம் மீது சுந்தரசாமி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏபி முருகானந்தம், அவரது தந்தை ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஏபி முருகானந்தம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நேற்று மீண்டும் கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. இதைதொடர்ந்து இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏபி முருகானந்தம் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருப்பதால் விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம். இதனால் ஏபி முருகானந்தம் கைது செய்யப்படுகிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications