“எப்ப பார்த்தாலும் பேட்டி.. ஏன் எங்களுக்கு பேட்டி கொடுக்க தெரியாதா?” அண்ணாமலை மீது எடப்பாடி அட்டாக்!
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி பேட்டி கொடுப்பது பற்றி காட்டமாக விமர்சித்துப் பேசியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமியை ஆதரித்து இன்று பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பொள்ளாச்சியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் அவர். விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுக்கிறார். பேட்டி கொடுப்பது மட்டும் தான் அவர் வேலை. பேட்டி கொடுத்தே மக்களை இழுக்கப் பார்க்கிறார்.
தலைவர்கள் பல வழிகளில் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால் இந்த தலைவர் டெக்னிக்காக அடிக்கடி பேட்டி கொடுத்து கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சித்து வருகிறார். அது ஒன்றும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் எடுபடாது. ஏன் எங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கத் தெரியாதா? தினந்தோறும் பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கலாம்? ஆனால், அதனால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்?
உழைக்கிறவர்களுக்கே இங்கே மரியாதை. உழைக்கும் தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக. இங்கே எல்லோரும் ஒரே இடம், ஒரே பதவி. டெல்லியில் இருந்து விமானத்தில் தலைவர்கள் வருகிறார்கள். ரோடு ஷோ நடத்துகிறார்கள். ரோட்டில் பயணம் செல்வதால் என்ன பயன்? அதனால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?
எத்தனை தலைவர்கள் வந்து சென்றாலும், பேட்டி கொடுத்தாலும் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டது அதிமுக அரசு. கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி செய்த போதும் மேகதாது அணை கட்டப்படும் என்றே சொன்னது. தி.மு.க ஆட்சியில் செய்த திட்டங்களை பற்றி பேசாமல் என்னை இழிவுப்படுத்திப் பேசுகின்றனர். தேர்தல் பரப்புரைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்னை பற்றி அவதூறாக மட்டுமே பேசி வருகிறார்" என்று காட்டமாகப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications