‘கருத்து சொல்றதோட நிறுத்திக்கோங்க’ – விவசாயி கேள்வியால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி
கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பயணம் செய்து வருகிறார். அதில் பல்வேறு சர்ச்சைகளும் வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் விவசாயிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயி ஒருவர் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆகியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை தொகுதிகள்ளுக்குட்பட்ட பல்வேறு விவசாய சங்கங்கள், தொழில் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பொள்ளாச்சியில் இன்று உரையாடினார். அப்போது அவர்கள் தரப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் ஆலோசனை
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ''ஒரு மாவட்டத்தை உருவாக்க ரூ.500 கோடி வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது 6 மாவட்டங்களை அறிவித்தேன் இந்த ஆட்சியில் பணம் இல்லை. அதனால் புதிய மாவட்டங்களை அறிவிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இங்கு 31 தடுப்பணைகளை கட்டினோம். அத்திக்கடவு அவிநாசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினோம்.
கள் இறக்குவது தொடர்பாக நல்லசாமி என்னிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். இது சாதாரணமான விஷயமல்ல. இது தமிழக மக்களின் நலம் சார்ந்த விஷயம். ஒரு திட்டம் என்றால் அதை சிலர் ஆதரிப்பார்கள். சிலர் எதிர்ப்பார்கள். ஒரு அரசியல் கட்சியாக எல்லாவற்றையும் சமாளித்தால்தான் ஆட்சிக்கு வர முடியும். எனக்கும் 500 மரங்கள் இருக்கின்றன. கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்." என்றார்
விவசாயி கேள்வி
அப்போது ஒரு விவசாயி, "அதிமுக ஆட்சியில் கள் இறக்க அனுமதி கொடுக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் அவருக்கு பதில் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அந்த விவசாயி தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனால் எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆகிவிட்டார்.
"ஐயா உட்காருங்க. அதான் சொல்லிட்டீங்க. தம்பி எடப்பாடியார் இருக்கும்போதுதான் நீரா பானத்திற்கு 23 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினார். இந்த திமுக அரசு ஒரு நிறுவனத்திற்கு கூட அறிவிக்கவில்லை." என்று பொள்ளாச்சி ஜெயராமனும், வேலுமணியும் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை.
டென்ஷன்
ஒரு கட்டத்தில் கடுப்பான எடப்பாடி பழனிசாமி மைக்கை வாங்கி, "உங்க பிரச்சனையை மட்டும் பார்க்க கூடாது. இது தமிழ்நாடு. புரிஞ்சுக்கோங்க. தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய முடியாது. கோரிக்கை மட்டும் வைங்க. சொல்றதை கேளுங்க. இங்க 8 கோடி மக்கள் இருக்காங்க. இங்கு ஒவ்வொருத்தரும் ஒரு பிரச்சனையை சொல்றாங்க. இங்கு பொதுவாக தான் பேச வேண்டும்.
இது எல்லாம் பதிவு ஆகும். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற வகையில் முதலமைச்சரோ, எதிர்க்கட்சி தலைவரோ பொதுவாக தான் பேச முடியும். உங்களுக்கு கஷ்டம் இல்லை என்று சொல்ல முடியவில்லை. அதற்கு மற்றவர்களின் மனது புண்படக்கூடாது. கருத்து சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்." என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications