என் அமைதியே வெற்றிக்கான அறிகுறி.. விரைவில் நன்மை நடக்கும்.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதில்!
ஈரோடு: நான் அமைதியாக இருப்பதே வெற்றிக்கான அறிகுறி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்டமாக எந்த திட்டமும் இல்லை என்று கூறிய செங்கோட்டையன், எனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கினாலும் விரைவில் நல்லது நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், திடீரென கலகக்குரல் எழுப்பினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூற, உடனடியாக அவருக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர்.

இதனால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அத்தனை கட்சிப் பதவிகளில் இருந்தும் நீக்கினார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மட்டும் செங்கோட்டையன் நீக்கப்படாத நிலையில், அடுத்தடுத்து செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் நீக்கத் தொடங்கினார். இதனால் ஈரோடு அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் செங்கோட்டையன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர்களான அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து திரும்பினார். அதன்பின் செங்கோட்டையன் மொத்தமாக அமைதியான நிலையில், இன்று காலை ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களை பல்வேறு பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.
இதனால் செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் தொடர்பாக அடுத்தக் கட்டமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ச்சியாக என் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டாலும், விரைவில் நன்மை நடக்கும்.
என்ன நடவடிக்கை எடுத்தாலும், என் தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இருக்காது. எனது அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி.. கோபிச்செட்டிப்பாளையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருவது தொடர்பாக எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சென்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
