கோவை மாநகராட்சி கூட்டத்தில் நிர்மலா சீதாராமனுக்கு எதிரா குபீர் முழக்கம்! மேஜையை தட்டிய கவுன்சிலர்கள்
கோயம்புத்தூர்: அன்னபூர்ணா உணவக உரிமையாளர், சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகியுள்ள நிலையில் உணவக உரிமையாளர் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோவை மாநகராட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி குறித்து வலியுறுத்தியிருந்தார். சீனிவாசனின் இந்த பேச்சு மொத்த வணிகர்களின் மனவேதனையையும் கொட்டி தீர்த்ததை போல இருந்தது. எனவே சீனிவானின் பேச்சுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. சோஷியல் மீடியாக்களில் இவரது பேச்சு பரவலாக ஷேர் செய்யப்பட்டது.

ஆனால் மறுநாள், சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவர் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக, விசிக, அதிமுக, சிபிஐ, சிபிஎம் என ஏறத்தாழ அனைத்து கட்சி தலைவர்களும் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்டிருந்தார்.
மறுபுறும், இன்று நடந்த கோவை மாநகராட்சி கூட்டத்திலும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுந்திருக்கிறது. காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தாகவும், இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயல்பாட்டை கண்டிப்பதாகவும் பேசியிருந்தார். இதற்கு மற்ற கவுன்சிலர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
கோவை உட்பட கொங்கு மாவட்டங்களை தங்களுக்குஆதரவானதாக மாற்ற பாஜக கடுமையாக பணியாற்றி வருகிறது. இப்படி இருக்கையில், இந்த மன்னிப்பு வீடியோ மொத்த முயற்சிக்கும் முடிவுரை எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications