கோவையில் நிர்மலா சீதாராமன்.. ஜிஎஸ்டி குறித்து அடுத்தடுத்து வந்த ஆதங்கம்.. உடனே தந்த உறுதி
கோவை: கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதுதொடர்பாக கண்டிப்பாக கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். தொழில்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை, தமிழ்நாட்டின் மற்ற எல்லா நகரங்களையும் விட சற்றே வித்தியாசமான நகரம் ஆகும். தொழில் முனைவோர்களை அதிகம் கொண்ட நகரமாக இருக்கிறது. கோவையில் பல ஆயிரம் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இதுதவிர கோவையில் சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய தொழிற்சாலைகள் அதிக அளவில் அமைந்துள்ளன. கோவை மாநகரில் தொழில் வளர்ச்சியும், புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கோவையில் உள்ள பல ஆயிரம் தொழில் முனைவோர் ஜிஎஸ்டி வரி குறித்து பலவிதமான மனக்குறைகளுடன் இருக்கிறார்கள். அவர்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகிறார்கள், இந்நிலையில் கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தொழில் துறையினருக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் தொழில் முனைவோருடன் நேரடியாக விவாதித்தார். . ஒவ்வொரு தொழில் முனைவோர் அமைப்புகளும் தங்கள் துறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.
பின்னர் தொழில்துறையினருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இங்கு பல்வேறு துறை அதிகாரிகளை வரவழைத்துள்ளோம். தொழில்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து ஆலோசித்தோம். தொழில்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நமது நாட்டின் 1,500 தொழில்சட்டங்களை எடுத்து விட்டோம். 40 ஆயிரம் புகார்களை குறைத்திருக்கிறோம். 2016-ம் ஆண்டில் இருந்தே தொழில் வளர்ச்சிக்கு உகந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கிகளை(தொழில் வளர்ச்சி வங்கி) நாங்கள் திறக்க உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மித்ரா பூங்கா விருதுநகரில் தொடங்கப்பட்டிருக்கிறது. 2028-க்குள் இந்த பூங்கா மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஜி.எஸ்.டி. குறைப்பு தொடர்பாக இங்கு பல்வேறு அமைப்பினரும் எனனிடம் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கண்டிப்பாக வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். பிரதமரின் விஷ்வ கர்மா திட்டத்தில் பலன் பெற நாடு முழுவதும் 2 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று நடந்த தொழில் முனைவோர்கள் பலர் தங்களது கருத்துகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர். அவர் அனைவரின் கருத்துக்களையும் அக்கறையுடன் கேட்டார். அப்போது ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சீனிவாசன் பேசுகையில், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே அகில இந்திய சிட்பண்ட்ஸ் சங்க தலைவர் வி.சி.பிரவீன் தலைமையிலான சங்க நிர்வாகிகள் சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து சிட்பண்ட் பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அவர்கள் வைத்த கோரிக்கை என்னவென்றால், வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வட்டியை பெறுகின்றன. இந்த வட்டி தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் சிட் பண்டுகள் பெறும் சேவை கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் ஜிஎஸ்டி காரணமாக சேமிப்பால் கிடைக்கும் பலன் குறைகிறது என்றும் வாடிக்கையாளர்கள் பணம் பெறும்போதும், வட்டியின் அளவு அதிகரிக்கிறது என்றும் எனவே இந்த தொகைக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் வலியுறுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications