கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் – ஸ்டாலின் அறிவிப்பு
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தான் அதிகமுறை விசிட் செய்தது கோவை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே கூறியுள்ளார். கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உக்கடம் - ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம் பெயரை சூட்டி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமையை பெற்ற கோவை, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை கோவை மாவட்டம் எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

கோவை மேம்பாலங்கள்
போக்குவரத்து நெரிசல் கோவையின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலமான அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டது.
காந்திபுரம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம், உக்கடம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் உக்கடம் - ஆத்துபாலம் இடையே கட்டப்பட்ட மேம்பாலத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். தற்போது அந்த மேம்பாலத்திற்கு அவர் பெயர் சூட்டியுள்ளார்.
உக்கடம் மேம்பாலம் சி. சுப்பிரமணியம் பெயர்
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு! ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
மக்கள் ஹேப்பி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட சி. சுப்பிரமணியம் மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு துறைகளில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது பெயரை உக்கடம் மேம்பாலத்திற்கு சூட்டியுள்ளது கோவை மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications