ஜூலை 14..செந்தில் பாலாஜி கைதான நாளில் திமுக விழாவா? தலைமைக்கு பறந்த கோரிக்கை! உடனே மாத்திட்டாங்களே!
கோவை: கோவையில் நடைபெறவிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவின் தேதி மற்றும் இடமானது மாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான ஜூலை 14 ஆம் தேதி விழா நடைபெறுவதாக தலைமைக்கு எடுத்துக் கூறப்பட்டதையடுத்து விழா தேதி மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 350 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி: இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜூன் 14ஆம் தேதி பிறப்பிக்கப்பட இருக்கிறது ஜூன் 14ஆம் தேதி கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 14ஆம் தேதி இந்த வழக்கில் முக்கிய உத்தரவு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, நாற்பது தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவருக்கு பாராட்டு விழா என கோவையில் நடைபெறவிருந்த முப்பெரும் விழாவின் தேதி மற்றும் இடம் நேற்று மாற்றப்பட்டது.
திமுக வெற்றி: தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முப்பெரும் விழா: அதில் 40 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா ஜூன் 14ஆம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்தது. இந்நிலையில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா தேதி மாற்றப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தேதி மாற்றம்: ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக "ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்" நடைபெறுகிறது. திமுக தலைவரின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
என்ன காரணம்: இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைதான நாள் ஜூன் 14ஆம் தேதி என்பதால் தான் ஓராண்டு நிறைவு பெறும் நாள் திமுக முப்பெரும் விழா நடக்க இருப்பதாக திமுக நிர்வாகிகள் சிலர் தலைமையிடம் அறிவுறுத்தினர். இதை அடுத்து இடத்தை மாற்றி அறிவிக்கலாம் என திமுக தலைமையிடம் கோவை நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் அது நன்றாக இருக்காது.. விழா நடக்கும் தேதியையே மாற்றி விடலாம் என தலைமை முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது திமுக சார்பில் நடைபெறவிருந்த முப்பெரும் விழா 14-ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications