"அதிவேகம் முதல் அதிகாரிகளின் அலட்சியம் வரை".. கோவை ஜி.டி. நாயுடு பாலத்தில் 3 பிரச்சனைகள்
கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு பெயர் வைத்ததில் தொடங்கி பயன்பாடுவரை பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. அந்த வகையில் இந்த பாலத்தின் அருகே இன்று மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். வாகனங்களின் கட்டுப்பாடற்ற வேகம், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது இரண்டுமே அங்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் என்ன பிரச்சனை நிலவுகிறது என்று இதில் காணலாம்.
தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமான, கோவை அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு மேம்பாலம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பில் பாலம் திறக்கப்பட்ட நிலையில் அதிவேகமாக பயணிக்கும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல், விபத்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது என்று சர்ச்சை எழுந்து வருகிறது. இன்று நள்ளிரவு ஜி.டி பாலத்தில் இருந்து கோல்டுவின்ஸ் பகுதியில் ஒரு கார் இறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் இறந்தனர்.

மேம்பாலம் விபத்து
"முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் உசைன், ஆரிஃப், செல்வபுரம் பகுதியை சேர்ந்த சத்யபிரியா. இவர்கள் 3 பேருமே டவுன்ஹாலில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வந்தனர். உயிரிழந்த 3 பேருமே 20 வயதிற்குட்பட்டவர்கள். காரில் தொழில்நுட்ப கோளாறு இருந்துள்ளது. கார் பிரேக் அடித்தும் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு நிற்காமல் சென்று விபத்து ஏற்பட்டது." என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
காரின் அதி வேகமும், தொழில்நுட்ப கோளாறும் தான் விபத்திற்கு காரணம் என்று காவல்துறை கூறியுள்ளது. பாலம் புதிதாக திறக்கப்பட்டிருப்பதால் அதில் அதிகளவு வாகங்கள் பயணிக்கின்றன. பெரும்பாலான வாகனங்கள் வேகமாக பயணிக்கிறார்கள். நேற்று இரவு மற்றொரு நிகழ்வில் வேகமாக சென்ற 3 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. பாலம் திறந்த முதல் நாளில் இருந்தே அதிவேகம், போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பின்மை பிரச்சனைகள் அதிகளவு இருப்பதாக புகார் எழுந்து வருகிறது.
வேகம்.. அலட்சியம்
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன், "அவிநாசி சாலை புதிய ஜி.டி மேம்பாலத்தில் செல்பவர்கள் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் வேகத்தை கண்காணிக்கும் கருவிகளை பொருத்த வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் அது உடனடியாக அலைபேசி எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இன்று காலை 1.30 மணி அளவில் அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலம் இறங்கியவுடன் 50 மீட்டர் தொலைவில் கோவையில் இருந்து அதி வேகமாக வந்த ஒரு கார் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான கார் அப்பளமாக நொறுங்கிப் போயிருந்தது விபத்துக்குள்ளான. காரை லாரியிலிருந்து எடுக்க முடியாத அளவிற்கு சிதைவுக்கு உள்ளாகி இருந்தது. வாகனத்தில் உள்ளே இருந்தவர்களையும் மீட்க முடியாமல் காவல்துறையினரும் ஆம்புலன்ஸ் பணியாளர்களும் திணறிக் கொண்டிருந்தார்கள்.
பாதுகாப்பு வசதிகள்
வாகனத்தில் உள்ளே இருந்தவர்கள் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது. புதிய பாலங்கள் திறந்தவுடன் அதை பார்வையிட வருபவர்கள் மற்றும் புதிதாக பயணிப்பவர்கள் வேகக் கட்டுப்பாட்டுடன் செல்வது மிகவும் முக்கியம். அரசும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "10 கி.மீ தொலைவில் சிசிடிவி கேமராவோ, வேக கட்டுப்பாடு கருவியோ இல்லை. கார், கனரக வாகனங்கள் அதி வேகமாக வருவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்கிறார்கள். சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்திலும் அதிவேகமாக பயணம் செய்கிறார்கள். வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, போட்டோ வீடியோ எடுக்கிறார்கள். பாலத்தின் ஏறுதளம், இறங்குதளம் பற்றிய தகவல் பலகை உள்ளிட்ட அறிவிப்புப் பலகை வைக்கப்படவில்லை.
தொடரும் குழப்பம்
இதனால் வாகன ஓட்டிகள் குழம்புகிறார்கள். பாலம் திறக்கப்பட்ட அக்டோபர் 9 ஆம் தேதி இரவு முதல் காலை வரை எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரம் மேம்பாலத்தில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. சிறிது நேரத்திலேயே இரவு நேர போக்குவரத்திற்கு தடை இல்லை என்று காவல் துறை விளக்கமளித்தது.
ஆனால் நள்ளிரவு நேரம் சில இடங்களில் மட்டும் பேரிகார்டு வைத்திருந்தனர். இருப்பினும் முழுமையாக தடுப்பு வைக்கவில்லை. இதனாலும் மக்களுக்கு ஏராளமான குழப்பம் ஏற்பட்டது. அரசு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்றனர்.












Click it and Unblock the Notifications