மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவித்தது சலுகைகளா? யார்னு பாருங்க
கோவை: ''அகவிலைப்படி என்பது, வருடந்தோறும் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுக்கப்படுவதாகும். அதை, 110 விதியின் கீழ் அறிவித்து, அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுகிறது.. சரண்டர் விடுப்பு, பண்டிகை கால முன் பணம் இவை எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுதான். இது சலுகை கிடையாது என்று அரசு ஓய்வூதியர் சங்கம் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை ரூ.5000-ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி அறிவித்திருந்தார்.

பண்டிகை கால முன்பணம்
இதனிடையே கடந்த ஏப்ரல் 28ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவது உள்ளிட்ட 9 விதமான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10,000 இருந்து ரூ.20,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தது, அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், இனி ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு ஊழியர்களுக்கு 9 சலுகைகளை, 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு
இது குறித்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் பலராமன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "அரசு ஊழியர்கள் அனைவரும், தமிழக அரசிடம் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதை திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனால்தான், இந்த அறிவிப்பை முதல்வர் எப்போது அறிவிப்பார்? என அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
அகவிலைப்படி என்பது, வருடந்தோறும் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுக்கப்படுவதாகும். புதிதாக கொடுப்பதுபோல், 110 விதியின் கீழ் அறிவித்து, திமுக அரசு அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறது.
திருப்பி செலுத்தக்கூடியவை
அதேபோல சரண்டர் விடுப்பு, பண்டிகை கால முன் பணம் இவை எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுதான். இதில் தொகை மட்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.. எனவே, இது சலுகை கிடையாது... திருப்பி செலுத்த கூடியவையே..
பழைய ஓய்வூதிய திட்டத்தை, 110 விதியில் அறிவித்திருந்தால் மகிழ்ச்சி அடையலாம்.. ஆனால், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை தவிர, வேறு ஒன்றுமில்லை. இதை எல்லாம் அரசு ஊழியர்களுக்கு சலுகையாக வழங்குவது போல், திமுக அரசு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது.
அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் கோரிக்கையை நிறைவேற்றாமல், ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த அரசு ஊழியர்களை, ஏமாற்றி வருகிறது" என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
முன்னதாக, முதல்வரின் 9 விதமான அறிவிப்புக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தது.. "எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் பணத்தை என்ன செய்தீர்கள்? என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல், குழுவை அமைத்திருப்பது தேவையற்றது. அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு பழைய ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும் என்பது தான்.
அதேபோல புதிய ஓய்வூதியத்திட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற 39,000க்கு மேற்பட்டவர்களுக்கும், பணியிடைமரணமடைந்த 7000க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணிக்கொடை தொடர்பாகவோ அல்லது குடும்ப ஓய்வூதியம் தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை.
ஆண்டாண்டு காலமாகக் காத்திருக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்புற நூலகர், ஊராட்சி செயலாளர், மக்கள் நலப் பணியாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர், காசநோய் தடுப்பு ஊழியர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர், தூய்மைப் பணியாளர் மற்றும் தூய்மைக் காவலர், குடும்ப நல ஆலோசகர், கணினி இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களைக் காலமுறை ஊதியத்தில் கொண்டு வருவது தொடர்பாக அறிவிப்பு ஏதுமில்லை.
கடனாளிக்கும் அரசு
சாலைப் பராமரிப்பு ஊழியர்களின் 41 மாத கால பணிநீக்க காலம், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது பற்றி அறிவிப்பு ஏதுமில்லை. மகளிர் உரிமையை நிலைநாட்டும் அரசு என தெரிவிக்கும் இந்த அரசு மகப்பேறு விடுப்பில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக ஏதும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.
மொத்ததில் 110-விதியின் கீழ் தமிழக முதல்வரின் அறிவிப்பு அரசு ஊழியர்களைக் கடனாளியாக்குவது எப்படி என்பதாகத் தான் பார்க்கிறோம்" என்றெல்லாம் கண்டனம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications