அட கொஞ்சம் சிரிங்க சார்.. போலீஸ் ஸ்டேஷனை கலகலப்பாக்கும் மகிழ்ச்சி அதிகாரிகள்! காவல்துறை புது முயற்சி
கோயம்புத்தூர்: போலீசாரின் மன அழுத்தத்தை போக்க கோவை காவல் நிலையங்களில் மகிழ்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக காவல்துறையினர் பலர் மன அழுத்தத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லா துறைகளிலும், எல்லா வேலைகளிலும் பணி அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக தனியார் துறைகளிலும், காவல்துறையிலும் இந்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தனியார் பணியிடங்களில், பொருள் உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது, கூடுதல் உற்பத்தி, லாபம், அதீத லாபம், கூடுதல் பணி நேரம் என அழுத்தம் இருக்கிறது. இதே காவல்துறையில் உயர் அதிகாரிகள், வழக்குகள், அரசியல்வாதிகளின் அழுத்தம் போன்றவை பெரும் தலைவலியை உருவாக்குகிறது.

இந்த மன அழுத்தத்தால் காவல்துறையில் ஏராளமான தற்கொலைகள் நடக்கின்றன. ஒரு காலத்தில் கான்ஸ்டபிள் போன்ற தொடக்க நிலை காவலர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது உயர் அதிகாரிகள் வரை இந்த தற்கொலைகள் நீள தொடங்கியுள்ளது. கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக கடந்த 7ஆம் தேதியன்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து காவல்துறையினரின் தற்கொலைகளை குறைக்க பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமான யோசனைதான் மகிழ்ச்சி அதிகாரிகளை நியமிப்பது. தற்போது கோவையின் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் இதே காவல் நிலையத்தில் பணிபுரிபவர்களாகவும், அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை அனைவரையும் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மன அழுத்தத்தில் உள்ள காவலர்களை கண்டறிந்து அவர்களுடன் உரையாடி மன அழுத்தத்திற்கான பிரச்னைகளை தாங்களாகவே சரி செய்வார்கள். அப்படி முடியாத பட்சத்தில் உயர் அதிகாரிகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த அதிகாரிகளுக்கான கூட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவது எப்படி என்பது குறித்து வகுப்பும் நடத்தப்பட்டது.
மட்டுமல்லாது காவலர்களின் வீடு அமைந்திருக்கும் பகுதியிலேயே அவர்களுக்கு பணி மாறுதலும் வழங்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நாட்களில் காவலர்கள் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து விழாக்களை கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த முயற்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கமிஷ்னர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications