அடுத்த தலைவலி!! கோவையில் படுவேகமாக அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. களத்தில் இறங்கிய சுகாதார துறை
கோவை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 31 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவை கட்டுப்படுத்துவதே அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்தது.
வேக்சின் பணிகள், தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவை மூலம் வைரஸ் பாதிப்பு தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.

டெங்கு பாதிப்பு
இந்தச் சூழலில் தற்போது அடுத்த தலைவலியாக பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைக் காலம் என்பதால் டெங்கு பாதிப்பு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல பொது இடங்களில் மழை நீர் தேங்காமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம்
டெங்கு காய்ச்சல் ஏடீஸ் வகை கொசுக்களினாலேயே பரவுகிறது. பொது இடங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்கி இருந்தால், அதில் இந்த கொசுக்கள் மிக எளிதாக இனப்பெருக்கம் செய்யும். இதனால் டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவும். இதன் காரணமாகவே நீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் இந்த மாதம் அதிக அளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

31 பேருக்கு டெங்கு
கோவை நகர்ப் பகுதிகளிலும் சரி புறநகர்ப் பகுதிகளில் சரி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவையில் 31 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவோர் குறித்த தகவல்களைத் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 31 பேர் கோவையில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை
இதையடுத்து டெங்கு பாதிப்பை அதிகரிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். வீடுகளைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறும், கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கையை எடுக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

12 சிறப்புக் குழுக்கள்
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் 12 வட்டாரங்களில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் குழுவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கொசு உற்பத்தி ஆகும் நிலை உள்ளதா என்பது ஆய்வு செய்து வருகின்றனர். கொசு உற்பத்திக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டால், வீடுகளுக்கு ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
பொதுமக்கள் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் டெங்கு அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications