5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ.. ஹெலிகாப்டரில் தீயணைக்கும் பணி தீவிரம்.. கோவையில் கருகிய வனம்
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலந்துறையை அடுத்த நாதேகவுண்டன்புதூர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மரங்கள், மூலிகை செடிகள் என பல ஏக்கர் நிலம் தீக்கிரையாகி உள்ள நிலையில் 5 நாளாக இன்றும் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. இதனால் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கோடைக்காலம் வந்தாலே வனப்பகுதிகளில் காட்டுத்தீ பிரச்சனை உருவாகி விடும். இதனால் பல இடங்களில் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் கூட ஆங்காங்கே திடீரென காடுகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

அந்த வகையில் தான் இந்த ஆண்டும் கோடைக்காலம் துவங்கிய நிலையில் வனப்பகுதிகளில் வனத்தறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீத்தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு தொடர்ந்து மலை பகுதிகளில் வனத்துறையினர் உஷாராக்கப்பட்டுள்ளனர்.
ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தான் கோடைக்காலத்தில் வறட்சி நிலவுவதோடு, மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீ பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்நிலையில் தான் தற்போதும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது கோவை மாவட்டத்தி்ல கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலந்துறை அடுத்த நாதேகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ திடீரென்று ஏற்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்களால் உடனடியாக தீயை தடுக்க முடியவில்லை. தொடர்ந்து 5 நாளாக வனப்பகுதியில் தீ எரிந்து வருகிறது. இதில் ஏராளமான மரங்கள், மூலிகை செடிகள் பல ஏக்கரில் எரிந்து தீக்கிரையாகி உள்ளன. மதுக்கரை வனத்துறையினர் தொடர்ந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவியாக ஆனைமலை, நீலகிரி, சிறுமுகை வனச்சரகங்களில் இருந்து வனப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 150 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 10 குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில் தான் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தொடங்கி உள்ளது. ஹெலிகாப்டரின் ராட்சத குடுவையில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதன்மூலம் தீயை அணைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஆலாந்துறை கிராமத்திற்கு உட்பட்ட ரங்கசாமி கோயில் பகுதியில் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications