அன்னபூர்ணா ஹோட்டலில் கிரீம் பன்னிற்கு ஜிஎஸ்டி எவ்வளவு? குழப்பிய இளைஞர்! உண்மை என்ன தெரியுமா?
கோவை: அன்னபூர்ணா ஹோட்டலில் கிரீம் பன்னுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி என ஒரு இளைஞர் வெளியிட்ட வீடியோவால் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில் முனைவோர் உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசிய கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சினைகளை கோவையின் தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் சுட்டிக் காட்டினார்.

அதாவது " பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. கிச்சனுக்கு வரும் இன்புட் அதிகாரிகளும் திணறுகிறார்கள். ஒன்னும் ஒரே மாதிர ஜிஎஸ்டி வைங்க. வரியை ஏற்றிவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி குழப்பம் வேண்டாம் என காமெடியாக கொங்கு தமிழில் பேசினார்.
அவர் பேசி முடிக்கும் வரை மற்ற தொழிலதிபர்கள் எல்லாம் சிரித்தனர். இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதில்லை என நிர்மலா தெரிவித்தார். அடுத்த நாளே நிர்மலா சீதாராமனை சந்தித்த அன்னபூர்ணா சீனிவாசன், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
அவர் இரு கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலானது. இது சர்ச்சையையும் கிளப்பியது. ஜிஎஸ்டி கவுன்சிலில் தைரியமாக பேசிய சீனிவாசனை மிரட்டி பணிய வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக பாஜக மீது விமர்சனம் எழுந்தது.
இந்த சர்ச்சை தொடர்பாக அன்னபூர்ணா நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கோவையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி புதன்கிழமை அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எம்எஸ்எம்இ மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் எங்கள் நிர்வாக இயக்குநர் டி.சீனிவாசன் கலந்துகொண்டு, உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விதிக்கப்படும் மாறுப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக குரல் எழுப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, மறுநாள் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து, தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி. தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். மேலும், எங்களது விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்னபூர்ணா உணவகத்தில் கிரீம் பன்னுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி என இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் பேசுகையில் "10 மணி வரை வெயிட் செய்து கிரீம் பன் வாங்கிய எனக்கு ஏமாற்றம்தான் மிச்சம். என்னன்னு கேட்குறீங்களா?

கிரீம் பன்னின் பில்லில் தெளிவாக 5 சதவீதம் ஜிஎஸ்டி என போட்டுள்ளது. 18 சதவீம் என ஓனர் சொல்றார் என கூறி அந்த இளைஞர் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். இதுகுறித்து நேரில் போய் விசாரித்த போது கிரீம் பன்னிற்கு அரசு விதிகளின்படி 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அப்படியிருந்தும் அந்த இளைஞர் ஏன் குழப்பினார் என தெரியவில்லை.













Click it and Unblock the Notifications