ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்! வானதி சீனிவாசனுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் திடீர் அட்வைஸ்!
கோவை: தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடிய வானதி சீனிவாசன் ''ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என அட்வைஸ் அளித்திருக்கிறார் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பு வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை புகழோ புகழ் என்று புகழ்ந்து பேசினார்.

அதே நேரத்தில் பாஜக எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசனுக்கு அட்வைஸ் அளிப்பதாக கூறி அவரை தர்ம சங்கத்திற்கும் ஆளாக்கினார். வானதி சீனிவாசன் திறமையான பெண் என்று தனக்குத் தெரியும் என்றும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் கமல் போட்டியிடுகிறார் என்றவுடன் தாமே ஒரு கணம் அதிர்ந்து தான் போய்விட்டதாகவும் வானதி சீனிவாசன் எப்படியோ வெற்றிபெற்றுவிட்டார் எனவும் கூறினார்.
எஸ்.பி.வேலுமணியோடு பயணிக்கும் வரை வானதி சீனிவாசனுக்கு ஒரு பிரச்சனையும் வராது என்றும் எதிரணிக்கு சென்றால் காணாமல் போய்விடுவாய் எனவும் வானதி சீனிவாசனுக்கு மிகவும் உரிமையோடு அறிவுரை வழங்கினார். வெற்றிபெற்ற மனிதர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை, புத்தியுள்ள மனிதர்கள் எல்லாம் வெற்றிபெறுவம் இல்லை என்ற சந்திரபாபு பாடலை பாடி வானதி சீனிவாசனை சூசகமாக குறிப்பிட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
இதனால் முதலில் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த வானதி சீனிவாசன், இந்தப் பேச்சுக்கு பிறகு இறுகிய முகத்துடன் காணப்பட்டார். தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடியவர்கள் மிகுந்த கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை என்றால் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications