2024 நாடாளுமன்றத் தேர்தல்! கோவையில் களமிறங்க கமல் திட்டம்? நாளை மறுதினம் முக்கிய ஆலோசனை!
கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் நாளை மறுதினம் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
அதில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு கூட இல்லாததால் இப்போதே அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் கவனிக்க ஆரம்பித்துவிட்டன.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமலஹாசனும் நாடாளுமன்றத் தேர்தல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் கோவை, சேலம் மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகளை நாளை மறுதினம் கோவையில் சந்திக்கும் கமல் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது பற்றி பேசவிருக்கிறார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவனம் ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 500 பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த கமல், மீண்டும் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல் அதற்கு பிறகு சந்தித்த நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டார்.

இதனிடையே முதல் முறையாக அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இவரது திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தொடருமா அல்லது தனித்து போட்டியா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். அது குறித்து ஆலோசிக்கத் தான் கட்சி நிர்வாகிகளை அழைத்திருக்கிறார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications