கோவை நீலாம்பூர் – மதுக்கரை புறவழிச்சாலையில் இன்று முதல் புதிய சுங்க கட்டணம்
கோவை: எல் அண்ட் டி கட்டுப்பாட்டில் இருந்த கோவை நீலாம்பூர் - மதுக்கரை புறவழிச்சாலை கடந்த ஜூன் 1 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டுக்கு சென்றது. இதையடுத்து அங்கிருந்த 5 சுங்க சாவடிகள் அதிரடியாக மூடப்பட்டு, ஒரே ஒரு சுங்க சாவடி மட்டும் இயங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சுங்க சாவடியில் இன்று முதல் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது. எந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழ்நாடு - கேரளா இடையேயான வர்த்தக தொடர்பு காரணமாக அந்த வழியே தினசரி பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நீலாம்பூர் - மதுக்கரை இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

கோவை புறவழிச்சாலை
அதன்படி 1999-2029 வரை சுமார் 30 வருடங்கள் இந்த சாலை பராமரிக்கும் பணி எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அந்த நிறுவனம் சார்பில் 6 இடங்களில் சுங்க சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. காரணம் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டதால், இந்த புறவழிச்சாலை இருவழி சாலையாகவே இருந்து வருகிறது.
இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. 6 சுங்க சாவடிகள் இருப்பது மக்களுக்கு ஒரு வித சுமையை ஏற்படுத்தி கொண்டிருந்தது. மேலும் அந்த புறவழிச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக எல் அண்ட் டி நிறுவனத்திடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
5 சுங்க சாவடிகள் மூடல்
அதில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி எல் அண்ட் டி நிறுவனம் புறவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைத்தது. தற்போது நேரடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்குள்ள 6 சுங்க சாவடிகளில், 5 சுங்க சாவடிகள் மூடப்பட்டு ஒரு சுங்க சாவடி மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு கோவை மற்றும் கேரளா மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அங்கு புதிய சுங்க கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் புறவழிச்சாலையில் புதிய சுங்க கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
இன்று முதல் புதிய கட்டணம்
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கோவை புறவழிச்சாலை சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 20 கி.மீ சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் (வணிக பயன்பாடு இல்லாதவர்கள்) ரூ.350 செலுத்தி ஒரு மாதத்துக்கான பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இது அந்தப் பகுதி மக்களுக்காக சலுகை விலையில் கொடுக்கப்பட்டுள்ள பாஸ்.
அதேநேரத்தில் கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இலகு ரக மற்றும் வணிகம் வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமும், அதுவே பெரிய வாகனங்களுக்கு ரூ.115 கட்டணமும் வசூலிக்கப்படும். இவற்றில் 24 மணி நேரத்தில் திரும்பும் (ரிட்டர்ன்) வாகனங்களுக்கு மொத்த கட்டணத்தில் 25% தள்ளுபடி கிடைக்கும்.
அதுவே கட்டணம் செலுத்திய ஒரு மாதத்தில், ஒற்றை பயணம் மேற் கொள்ளும் வாகனங்களுக்கு மொத்த கட்டணத்தில் 33% தள்ளுபடி கிடைக்கும். அதேபோல கார், ஜீப், வேன், இலகு ரக மோட்டார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு ரூ.35 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதுவே ஒரே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.55 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிற்றுந்து, இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு ரூ.60 கட்டணமும், அதே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.90 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் டிரக் வாகனங்களுக்கு ரூ.125 கட்டணமும், அதே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.185 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக 3 அச்சு வணிக வாகனங்களுக்கு ரூ.135 கட்டணமும், அதே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.200 கட்டணமும் வசூலிக்கப்படும். கனரக கட்டுமான வாகனங்களுக்கு ரூ.195 கட்டணமும், அதே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.290 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 7 மற்றும் அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.235 கட்டணமும், அதே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.350 கட்டணமும் வசூல் செய்யப்படும்." என்றனர்.












Click it and Unblock the Notifications