கோவையில் அரிசி கடையில் வடிவேலு ஸ்டைலில் சாம்பிள்.. மூட்டை மூட்டையாக ஏமாற்றியவர் சிக்கியது எப்படி?
கோவை: நடிகர் வடிவேலு ஒரு படத்தில் அரிசி வாங்குவது போல் வருவார். அப்போது 100 மூட்டை அரிசி வாங்க போவதகாவும், ஒரு மூட்டைக்கு ஒரு கிலோ என 100 கிலோ அரிசி சாம்பிள் கேட்பார்.. அதன்பிறகு அவரது விசிட்டிங் கார்டையே அவருக்கு கொடுத்துவிட்டு முதலாளிக்கு அனுப்பிவிட்டு போன் செய்வதாக கூறி ஏமாற்றுவார்.கிட்டத்தட்ட கோவை கருமத்தம்பட்டி பகுதியில் இப்படி ஒருவர் ஏமாற்றியுள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
திருடர்கள் பல விதங்களில் உலா வருகிறார்கள்.நாம் சற்று ஏமாந்தால் சதுரங்க வேட்டை படம் பாணியில் திருடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஐந்து வட்டி, 10 வட்டி தருவதாக கூறுவோரை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாறுபவர்கள் அதிகம். அதேபோல் ஒரே நேரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று கூறினாலும் நம்பி ஏமாறுவோர் அதிகமாக இருக்கிறார்கள்.

ஒருவரிடம் அதிக பணம் இருக்கிறது என்றால், அவரை ஏமாற்ற பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். அதேபோல் கடை வைத்துள்ளவர்களையும் அதிக ஆர்டர், மிகப்பெரிய லாபம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள். அதுவும் வடிவேலு ஒரு படத்தில் செய்தது போலவே ஏமாற்றி இருக்கிறார்கள்.
கோவை கருமத்தம்பட்டியை அடுத்த வாகராயம்பாளையத்தை சேர்ந்த அன்பரசு என்பவர், கருமத்தப்பட்டி பகுதியில் உள்ள சோளக்காட்டுபாளையத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த 44 வயதாகும் கோபி அண்மையில் அன்பரசனை அணுகி தான் கோவையில் உள்ள பல மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் உள்ள விடுதிகளுக்கு அரிசி விற்பனை செய்வது வருவதாக கூறியிருக்கிறார்.
தனக்கு ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் தேவைப்படுவதாக அன்பரசனிடம் கோபி கூறியிருக்கிறார். மேலும் தங்களிடம் உள்ள அரிசி வகைகளில் ஒவ்வொரு மூட்டையை சாம்பிளாக தரும்படி கேட்டிருக்கிறாராம். அதை உண்மை என்று நம்பி அன்பரசன், கடந்த ஒரு மாதத்தில் 25 கிலோ எடையுள்ள 450 அரிசி மூட்டை அரிசியை கொடுத்திருக்கிறார். அதன்பிறகு கோபி அரிசி மூட்டை கேட்டு ஆர்டர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த அன்பரசு விசாரித்த போது கோபி, கோவையின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் அரிசி மூட்டைகளை சாம்பிள் வாங்கி பல இடங்களில் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்த அன்பரசு அளித்த புகார் அளித்தார். அதன் பேரில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை தேடிப்பிடித்து கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கோபி மீது 10-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோபியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். நடிகர் வடிவேல் சினிமா பட பாணியில் அரிசி சாம்பிள் வாங்கி மோசடி செய்த சம்பவம் கோவை கருமத்தப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications