மல்லை சத்யா பற்றி பேசி தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.. துரை வைகோ பரபர!
கோவை: "மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம். அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை." என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த மதிமுக பொதுக்குழுவில், மல்லை சத்யா துரை வைகோவை விமர்சித்து பேசினார். இதனையடுத்து துரை வைகோ கோபமடைந்து வெளியேறினார். இதன் காரணமாக துரை வைகோ- மல்லை சத்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன்பிறகு வைகோ தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.

இந்நிலையில் தான் வைகோ, மல்லை சத்யாவை விமர்சித்து கட்சி கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. துரோகி பட்டம் கொடுத்து வைகோ தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக அக்கட்சியின் மல்லை சத்யா குற்றம் சாட்டியிருந்தார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார் என்றும் வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார் மல்லை சத்யா.
இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுவின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது படங்களை கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உண்ணாவிரத போரட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் துரை வைகோ செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது பேசிய அவர், "மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம். அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. திருச்சியில் மாநாடு நடத்துவதை பற்றி தான் நாங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், "மல்லை சத்யா குறித்து பேசுவதே நேரக் கொலை. ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், வெளியில் செல்வதும் இருக்கும். இவரது குற்றச்சாட்டுக்கு உண்டான விளக்கத்தை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். தலைவரும் கூறியிருக்கிறார், எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் பதில் கூறியிருக்கிறார்கள். எனவே தயவுசெய்து மல்லை சத்யாவை கடந்து செல்வோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், "பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். விமர்சனங்களுக்கு பதில்கள் கொடுத்து இருக்கிறோம். மக்களுக்கான விஷயங்களை பேசுவோம். மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சியில் இருந்து யாரும் செல்லவில்லை" எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications