உங்க விருப்பத்தை மீறி எந்த திட்டமும் வராது.. விவசாயிகளுக்கு உறுதி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
கோவை : விவசாயிகளின் விருப்பத்தை மீறி எந்தத் திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வராது என்கிற உத்தரவாதத்தை அளிப்பதாகவும், தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கும் விவசாயிகள் அவர்கள் ஒப்புக்கொள்ளும் விலைக்கு மட்டுமே நிலம் எடுக்கப்படும், விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் பாதுகாப்பு தொழில் கூடம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாயிகளின் நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது. போராடுகின்ற விவசாயிகள் இதைப் புரிந்து கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டியில் பாதுகாப்பு தொழில் கூடம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாயிகளின் விருப்பத்தை மீறி எந்த திட்டமும் கொண்டு வரப்படாது என்கிற உத்திரவாதத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் விருப்பத்தை மீறி
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "திருப்பூர், கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் விவசாயிகள் மத்தியில் தங்கள் நிலம் பறிபோய் விடுமோ, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வந்து விடுமோ என அச்சம் எழுந்தது. தனியார் கம்பெனி நிலங்கள் மட்டுமே தொழில் பூங்காவுக்காக எடுக்கப்படும். விவசாயிகளின் விருப்பத்தை மீறி எந்த திட்டமும் கொண்டு வரப்படாது என்கிற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன்.

செந்தில் பாலாஜி உறுதி
விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் கேட்கின்ற விலைக்கு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும். தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கும் விவசாயிகள் ஒப்புக்கொள்ளும் விலைக்கு மட்டுமே நிலம் எடுக்கப்படும். அதுவரை எந்த கட்டாயமும் இல்லை. அங்கு நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தும் எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்கப்படாது. ஆழியார் குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த போது அந்தத் திட்டத்தை ரத்து செய்து மாற்று திட்டத்தை அறிவித்தார் முதல்வர்.

விவசாயிகளும் வரவேற்றனர்
விவசாயிகளின் நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதை விவசாயிகளிடம் விளக்கியபோது அவர்களும் வரவேற்றார்கள். போராடுகின்ற விவசாயிகள் இதைப் புரிந்து கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். கோவை அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவசாயிகளின் நிலங்கள் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் நம்ப வேண்டாம்
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேதி நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முகாம் நடந்து வருகிறது. இதற்கு வருகிற 31-ஆம் தேதி கடைசி நாள். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும். அதில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்துள்ளனர். வருகிற 31ஆம் தேதி முடிந்த பின்னர் எத்தனை பேர் இணைத்துள்ளனர் என்ற பட்டியலை கணக்கில் எடுத்துவிட்டு தேதியை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சரின் உத்தரவை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சிலர் அரசியலுக்காக சில தவறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications