கோவை ஒப்பணக்காரவீதி டிராபிக் பிரச்சனைக்கு வந்தாச்சு விடிவுகாலம்.. போலீஸ் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
கோவை: தமிழகம் மற்றும் கேரள மாநிலத்துக்கு இடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையின் மையப் பகுதியாகவும், பொதுமக்களின் வணிகத் தேவையைப் பூர்த்தி செய்யும் பகுதியுமாகவும் உள்ள ஒப்பணக்கார வீதி வழியாக கேரள பேருந்துகள் இயக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாநகரம், ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கேரளா போக்குவரத்து கழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு வழித்தடம் குறித்த புதிய அறிவிப்பை கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒப்பணக்கார வீதி கோவையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஒப்பணக்கார வீதி முதல் டவுன்ஹால் வரை துணிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள், சைக்கிள் கடைகள், செல்போன் உதிரிபாக கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. கோவையில் துணி, நகை வாங்குவதற்காக அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து கூட மக்கள் வருவது வழக்கம்.

தமிழகம் - கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கோவை வழியாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் இருந்து வேலை, தொழில், வியாபாரம், கல்வி என ஏராளமான மக்கள் தினந்தோறும் வருகை புரிகின்றனர். கோவையில் இருந்து கேரளம் செல்லும் பேருந்துகளும், கேரளத்தில் இருந்து கோவை வழியாக வரும் பேருந்துகளும் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் ஒப்பணக்கார வீதி வழியாக இயக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாநகர ஒப்பணக்கார வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டி டிசம்பர் 13 ஆம் தேதி முதல் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து உக்கடம், பாலக்காடு வழியாக கேரளா செல்லும் கேரள அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் கீழ் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்திபுரத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள்: (KSRTC) செல்லும் வழித்தடம்
1. காந்திபுரம் (Gandhipuram)
2. ஆர்வி ரவுண்டானா (Rvee Roundana)
3. மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் (Women's Polytechnic)
4. மணீஸ் பள்ளி (Manis School)
5. லட்சுமி மில்ஸ் சந்திப்பு (Lakshmi Mills Junction)
6. காமராஜர் ரோடு (Kamarajar Road)
7. சுங்கம் ரவுண்டானா (Sungam Roundana)
8. வாலாங்குளம் (Valangulam)
9. உக்கடம் (Ukkadam) வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல, கேரளாவில் இருந்து காந்திபுரம் வரும் கேரள அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் கீழே குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் மட்டுமே சென்று வர கட்டாயம் அறிவுறுத்தப்படுகிறது.
1. உக்கடம் (Ukkadam)
2. வாலாங்குளம் (Valangulam)
3. சுங்கம் ரவுண்டானா (Sungam Roundana)
4. காமராஜர் ரோடு (Kamarajar Road)
5. அண்ணாசிலை (Anna Statue)
6. மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் (Women's Polytechnic)
7. ஆர்வி ரவுண்டானா (Rvee Roundana)
8. காந்திபுரம் (Gandhipuram)
மேற்குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே கட்டாயமாகப் பேருந்துகள் செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே திருப்பிவிடப்படும் என கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications