என்.ஐ.ஏ. கைது செய்த கோவை முகமது அசாருதீன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதி
Recommended Video
கோவை: தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) கைது செய்த கோவை முகமது அசாருதீன் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் தென்னிந்திய தளபதியாக செயல்பட்டவர் என்கின்றன விசாரணை வட்டாரங்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த அபுபக்கரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கோவை முகமது அசாருதீன்தான் இதில் முக்கிய பங்காற்றி வருவாதாக தெரிவித்தார்.
அதேபோல் இலங்கை சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சஹ்ரானுடன் முகமது அசாருதீன் தொடர்பில் இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து மே 30-ந் தேதி அசாருதீன் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

8 மணிநேர சோதனை
இதனைத் தொடர்ந்து கோவையில் அசாருதீன் மற்றும் கூட்டாளிகளின் வீடுகள், பணிபுரியும் இடங்கள் என 8 இடங்களில் 8 மணிநேர சோதனை நடைபெற்றது. இச்சோதனையின் முடிவில் செல்போன்கள், பென்டிரைவ்கள், துண்டு பிரசுரங்கள், பிரசார வீடியோக்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை அசாருதீன் கைது
மேலும் முகமது அசாருதீன் மற்றும் கூட்டாளிகள் 4 பேரை அழைத்து பல மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் அசாருதீன் கைது செய்யப்பட்டார்.

தென்னிந்திய தளபதி அசாருதீன்
கைது செய்யப்பட்டிருக்கும் அசாருதீன், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதியாக செயல்பட்டவர். ஃபேஸ்புக்கில் KhilafahGFX என்ற பக்கத்தை உருவாக்கி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கருத்துகளை பதிவிட்டு ஆட்சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்.

சஹ்ரானுடன் தொடர்பு
மேலும் இலங்கை பயங்கரவாதி சஹ்ரானுடன் நேரடி தொடர்பிலும் இருந்தவர். இவருக்கும் இலங்கை தற்கொலைப் படை தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது உறுதியாகவில்லை. அசாருதீனின் கூட்டாளிகளின் இடங்களில் தொடர்ந்து 2- வது நாளாக சோதனை நடவடிக்கையும் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications