நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதி சாலை விபத்தில் மரணம்.. வாகன ஓட்டி எஸ்கேப்.. போலீசார் விசாரணை
கோவை: நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்த கருணாநிதி இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதியதில் நீதிபதி கருணாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நீதிபதி கருணாநிதி (வயது 58). இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இன்று இவர் சொந்த வேலையின் காரணமாக காரில் சின்னாம்பாளையம் சென்றிருந்தார். தொடர்ந்து சாலை ஓரம் காரை நிறுத்திவிட்டு மளிகை கடைக்கு செல்வதற்காக பொள்ளாச்சி - உடுமலை சாலையை கடக்க முற்பட்டுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனம் ஒன்று நீதிபதி கருணாநிதி மீது மோதியது. பலமாக மோதியதில் நீதிபதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றார். விபத்து குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், நீத்பதி கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி யார்? என்று விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்றவரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications