"இந்தியா" கூட்டணியை விட்டு திமுகவை விரட்ட 'இந்தி' பிரச்சனையை கையில் எடுத்தார் நிதிஷ்குமார்- அண்ணாமலை
கோவை: "இந்தியா" கூட்டணியை விட்டு திமுகவை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே "இந்தி" மொழி பிரச்சனையை கையில் எடுத்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசினார். 3 மாதங்கள் தொடர்ந்து இப்படியே பேசினார் உதயநிதி ஸ்டாலின். என் பதவியே போனாலும் பரவாயில்லை சனாதான தர்மத்தை ஒழிப்பேன் என்றார் உதயநிதி. இதன் விளைவாக இன்று இந்தியா முன்பாக "இந்தி" கூட்டணி தலைகுனிந்து நிற்கிறது.

விரட்டியடித்த நிதிஷ்குமார்: திமுகவை 'இந்தி' கூட்டணியில் நீடிக்கவிட்டால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 30,40 சீட்டுகளும் கிடைக்காது என நினைத்துவிட்டார் நிதிஷ்குமார். இதனால்தான் முதல்வர் ஸ்டாலினையும் டிஆர் பாலுவையும் போய் இந்தி படித்துவிட்டு வாங்க என சொல்லி அனுப்பினார். நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை திமுகவை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே "இந்தி"யை வைத்து வகுப்பெடுத்து அனுப்பி வைத்தார்.
திமுக பிடிவாதம்: ஆனால் திமுகவோ எவ்வளவு அவமானப்படுத்தினாலும் வெளியே போகாது. பஸ்ஸில் உட்கார்ந்துவிட்டோம்; இறங்கமாட்டோம் என அடம்பிடிக்கிறது திமுக. லோக்சபா தேர்தல் வரைக்கும் 'இந்தி' கூட்டணியில் ஒட்டிக் கொள்வோம் என அடம்பிடிக்கிறது திமுக. இந்தியை வைத்து அரசியல் செய்த திமுக இன்று நிதிஷ்குமார் முன்பாக வாய் திறக்காமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.
3 மாதத்தில் விளைவுகள்: இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அடுத்து எங்க கொண்டு போய் நிறுத்துவார் தெரியுமா? அப்பன் வீட்டு சொத்துன்னு நான் சொன்னது கரெக்ட்தான்.. இதை மாற்றப் போவது இல்லை என்கிறார் உதயநிதி. இதுதான் உதயநிதி ஸ்டாலின் பேட்டன். அடுத்து 3 மாதம் கழித்து இதன் விளைவுகளைப் பார்க்க வேண்டும். அதாவது 2024 லோக்சபா தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கான விளைவுகள் தெரியும்.
உதயநிதியால் திமுகவுக்கு அழிவு: உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை திமுக என்கிற கட்சியை மூட்டை கட்டி கடலில் வீசனும் என முடிவு செய்துவிட்டார். 1949-ல் ஆரம்பிக்கப்பட்ட திமுக என்கிற கட்சியை உதயநிதி ஸ்டாலின் மொத்தமாக உடைத்து சுக்கு நூறாக பீஸ் பீஸாக்கி எறிவதற்காக வந்திருக்கிறார். இப்படி உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பேச வேண்டும். அது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது. திமுக என்கிற தீய சக்தியை அப்புறப்படுத்த இது நல்ல வாய்ப்பு.
4 ஜாதிகள்தான்: இந்தியாவில் மொத்தம் 4 ஜாதிகள்தான் இருக்கிறது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகளுக்காகவே நாங்கள் வேலை பார்க்கிறோம். இதை பிரதமர் மோடியே பல முறை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். இதில் ஏழைகள் என்ற ஜாதியே இருக்கக் கூடாது என ஆட்சி செய்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications