ஆன்லைனில் ஏசி வாங்கி அவஸ்தை.. பிரபல நிறுவனத்துக்கு எதிராக கோவை நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் தீர்ப்பு
கோவை: வாங்கிய சில நாளிலேயே பழுதடைந்த ஏசிக்குரிய பணத்தை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும் என்று கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனஉளைச்சலுக்காக 25000 பணத்தை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக ஏசி விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், மக்கள் ஏசி விற்பனை செய்யும் கடைகளில் குவிந்தனர். இதேபோல் பலர் ஆன்லைனிலும் ஏசி வாங்கி வருகிறார்கள். ஏசியை பொறுத்தவரை ஆன்லைனிலோ அல்லது கடைகளிலோ எப்படி வாங்கினாலும் வாரண்டி உண்டு.

ஆனால் ஒரு சிலருக்கு ஏசி சரியாக வேலை செய்யாது. கியாஸ் தீர்ந்திருக்கும்.. சரியாக பிட்டிங் செய்திருக்கமாட்டார்கள். குறைபாடு உள்ள ஏசிகள் மாட்டப்பட்டிருக்கும்.. இப்படி ஏசியில் ஏதாவது குறைபாடு இருந்தால், அவற்றை நிறுவனங்கள் சரி செய்துதான் தரும். மீண்டும் மீண்டும் பிரச்சனை ஆனால் புதிய ஏசி மாட்டித்தரமாட்டார்கள்.. ஏசியை பொறுத்தவரை வாங்கிய உடனே பிரச்சனை வந்தால், அதை வாங்கியவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள்.
மேலும் ஏசி வேண்டாம் என்றும் பணத்தை திரும்ப தருமாறும் கேட்பார்கள்.. ஆனால் ஏசியை விற்றவர்களோ குறைகளை சரி செய்து தருகிறோம்.. பணத்தை திரும்ப தர மாட்டோம் என்று மறுப்பார்கள்.. அப்படியா சூழலை கோவையைச் சேர்ந்தவர் சந்தித்தார். அவர் அதனை அமைதியாக கடந்துவிடாமல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வெற்றி பெற்றுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை அசோக்நகர் கோவிந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தை அணுகி ஏ.சி. வாங்க பதிவு செய்தார். அதன் பேரில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி அன்று, சந்தோஷின் வீட்டுக்கு ஏ.சி. மிஷின் வந்தது. அதற்கு ரூ.22 ஆயிரத்து 999 பணத்தை செலுத்தினார்.
ஆனால் அந்த ஏ.சி. பொருத்திவிட்டு சென்ற சில நாட்களிலேயே பழுதானது. உடனே அவர் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தை அணுகியபோது தொழில் நுட்ப ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள், ஏ.சி.யில் கியாஸ் தீர்ந்து விட்டதாக கூறி கியாஸ் நிரப்பி விட்டு சென்றனர்.
ஆனால் அடுத்த சில நாட்களில் ஏ.சி. மீண்டும் பழுதானது. இதனால் அவர் ஏ.சி.யை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு அதற்குரிய தொகையை பிரபல ஆன்லைன் நிறுவனம் திரும்ப தரப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த கோவை நுகர்வோர் நீதிபதி தங்கவேல், ஏ.சி.க்கான விலை ரூ.22,999-ஐ சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும், அத்துடன் மனஉளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications