சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: விடியா அரசிடம் இருந்து விரைவில் விடியல் பிறக்கும்.. பொள்ளாச்சி ஜெயராமன்
கோவை: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றும் தற்போது திமுக ஆட்சியில் எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் அச்சத்துடன் இருந்து வருவதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக அதிமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்சி பொதுக்கூட்டங்களில் பேசும் போது திமுக அரசு நிர்வாக திறன் அற்ற அரசாகவும் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவில்லை என்றும் விமர்சித்து வருகிறார்.

கேள்வி எழுப்பப்படும்
நாளை தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், சட்டப்பேரவையிலும் இந்த விவகாரத்தை அதிமுக எழுப்பும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்ற கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி நெகமம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மக்கள் நிம்மதியாக இருந்தனர்
விபத்தில் காயம் அடைந்தவர்கள் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பொள்ளாச்சி ஜெயராமன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்கரை ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

விடியல் பிறக்க வேண்டும்
தற்போது நிலைமை நேர்மாறாக மாறிவிட்டது. திமுக ஆட்சியில் எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு விரைவில் இந்த அரசிடம் இருந்து விடியல் பிறக்க வேண்டும் என்பதுதான் கொள்கை. அதனால், இந்த ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டிப்பாக சட்டமன்றத்தில் எழுப்புவோம்.

தேங்காய் விலை வீழ்ச்சி
தமிழகத்தில் தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதை நிலை தொடர்ந்து நீடித்தால் தென்னை மரங்களை வெட்டி அழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே கொப்பரை விலை உயர்த்தி வழங்க வேண்டும். கொப்பரை உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.

சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும்
விளைச்சல் ஆகும் அனைத்து கொப்பரை தேங்காய்களையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க செய்வது, தேங்காய் எண்ணெய்யை நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பது, தேங்காய் எண்ணெயை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications