கோவை விவசாயிகளிடம் நேரடியாக மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. என்ன நடந்தது?
கோவை: கோவை நடைபெறும் வேளாண் மாநாட்டில் விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டுள்ளார். வேளாண் மாநாட்டிற்கு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததற்காக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, மருதமலை முருகனுக்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக ஆந்திராவின் புட்டபர்த்தியில் நடைபெற்றும் வரும் சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தார்.

அப்போது கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வரவேற்றனர். இதன்பின் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து கோவையில் பாஜக தொண்டர்களின் உற்சாக வரவேற்பில் பிரதமர் மோடி நிதானமாக வந்தார். அவருக்கு பூக்களைத் தூவி பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். இதன்பின் அரங்கிற்கு வந்த பிரதமர் மோடி, விவசாயிகள் 10 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் அவருக்கு மாட்டு வண்டி நினைவு பரிசாக அளிக்கப்பட்டது.
இதன்பின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், புட்டபர்த்தி விழாவுக்கு சென்றதால், இங்கு வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது. அதனால் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த அரங்கிற்கு வரும் போது விவசாயிகள் பலரும் தங்களின் தோளில் இருந்த துண்டை கையில் எடுத்து சுழற்றினர். அப்போது பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ என்று மனம் நினைத்தது.
மருதமலை முருகனுக்கு தலை வணங்குகிறேன். கோவை என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறனை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமியாகும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி மதியம் 1.45 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மதியம் 2 மணியளவில் தான் கோவை வந்ததால், 3.30 மணிக்கு தான் நிகழ்ச்சி தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications