கோவை தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு
கோவை: கோவை மக்களை குறிவைத்து ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை தொழில் நிறுவனங்கள் மிக அதிகமாக உள்ள நகரமாகும். இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கியமான நகரமாகும். கோவை இன்னும் 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடையும் என்று கருதப்படுகிறது.

பல்லாயிரம் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள கோவையில் பல்வேறு வகையான நூதன மோசடிகள் மற்றும் ஏமாற்றும் நோக்குடன் முதலீட்டு நிறுவனங்கள் அதிகமாக இருந்து வருகின்றன. திடீரென சில முதலீட்டு நிறுவனங்கள் கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றன. ஆரம்பத்தில் அதை நம்ப வைக்க பணத்தை அள்ளி இறைக்கின்றன. கடைசியில் மக்களை ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றன. அப்படி கோவை பகுதியில் ஏமாற்றிய நிறுவனங்கள் அதிகம் ஆகும்.
அப்படி கோவை மக்களை குறிவைத்து ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வேண்டுகோள் வைத்துள்ளனர்
கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் இயங்கி வந்த சன்மேக்ஸ் நிறுவனத்தின் மீதும், அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் கீதா என்ற கீதாஞ்சலி ஆகியோர்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல கோவை மாநகரம் நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வந்த எல்.ஜி. மார்க்கெட்டிங் மனுத்திம் நிதி நிறுவனம் மற்றும் கோல்டன் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களில் அதிக லாபம் தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியப்படி லாப தொகையும் வழங்காமல், முதலீட்டு தொகையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே மேற்கண்ட நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் தகுந்த அசல் ஆவணங்களுடன் மாநகர போலீஸ் கமிஷனர் வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications