அதிர்ந்துபோன கோவை.. காலையிலேயே குவிந்த 450 போலீஸ்.. கல்லூரி மாணவர்களின் அறைகளில் அதிரடி சோதனை
கோவை: கோவை மதுக்கரை, செட்டிபாளையம், கேஜி சாவடி ஆகிய மூன்று பகுதிகளில் விடுதிகள் மற்றும் அறைகள் எடுத்து தங்கியுள்ள மாணவர்களின் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டாதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குற்றச் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி பணியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளைக் குறிவைத்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் போலீஸார் தொடர்ந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய வகை கஞ்சா ஆயில், கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கல்லூரி மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 42 திருடப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் கோவையில் உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூர் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் வசித்து வரும் அறைகளில் போலீஸார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், செட்டிபாளையம், மதுக்கரை, கேஜி சாவடி பகுதிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செட்டிபாளையம், கேஜி சாவடி மதுக்கரை உள்ளிட்ட மூன்று இடங்களில் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் அறைகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனரா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து சுமார் 450க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தினரிடமும் மாணவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துகின்றனரா என்று சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 லட்சம் மதிப்பிலான 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications