பொள்ளாச்சி வழக்கு.. 1,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை.. 9 குற்றவாளிகளில் யாருக்கு என்ன தண்டனை?
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 9 குற்றவாளிகளில் யாருக்கு என்ன தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை பார்க்கலாம்.
2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு. மாணவிகள், இளம் பெண்களை என பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு
இதனைத் தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் விசாரணை முடிவடைந்த நிலையில், கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
5 ஆயுள் தண்டனை
இதில் வழக்கின் முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 2ஆம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் 5ஆம் குற்றவாளியான மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 3ஆம் குற்றவாளியான சதீஷ் மற்றும் 7ஆம் குற்றவாளியான ஹேரன் பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
சாகும் வரை ஜெயில்
அதேபோல் 4ஆம் குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2ஆயுள் தண்டனையும், 6ஆம் குற்றவாளியான பைக் பாபு, 8ஆம் குற்றவாளியான அருளானந்தம் மற்றும் 9ஆம் குற்றவாளியான அருண் குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்பதால், ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் ஒன்றுதான்.
சபரிராஜன், திருநாவுக்கரசு
இதில் 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2ஆம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் 5ஆம் குற்றவாளியான மணிவண்ணன் ஆகியோரின் ஐபோன் மற்றும் லேப்டாப்பில் இருந்துதான் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் ஆனைமலை அருகே உள்ள சின்னப்பாளையம் அருகில் தான் இந்த கொடூரங்கள் நடந்துள்ளன.
சிபிஐ விசாரணை
பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த கொடூர சம்பவங்களை முழுமையாக விசாரித்து சிபிஐ தரப்பில் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் நேரடியாக வந்து சாட்சியம் அளித்துள்ளனர். மேலும், 9 குற்றவாளிகளின் செல்ஃபோன்களில் இருந்த வீடியோக்கள் அழிக்கப்பட்ட போது, அதனை மீண்டும் கைப்பற்றி சிபிஐ ஆதாரமாக கொடுத்தது.












Click it and Unblock the Notifications